தாய்மை-குழந்தை பராமரிப்பு

வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்

நமது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பான பணிகளை சத்தமின்றி செய்திருக்கின்றன. அதில் ஒன்று குழந்தைகள் பராமரிப்பு. அதன்மூலம் எதிர்கால இந்தியாவுக்கு நல்ல இளைஞர்களை தர வேண்டும் என்ற அக்கறை அவர்களிடம் இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் வேலைகளை பகிர்ந்து கொண்டார்கள். குடும்பத்தின் மூத்த குடிமக்களான தாத்தா, பாட்டி, பேரன், பேத்திகளுக்கு நீதிகதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். அந்தக் கதைகளில் ராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் போன்ற நூல்களில் சொல்லப்பட்ட நீதிபோதனைகளை கதைகளைப் போல சொன்னார்கள். சுவாமி விவேகானந்தருக்கு அவரது சின்னவயதில், அன்னை புவனேஸ்வரி மகனுக்கு உணவூட்டும் போதும், மடியில் தலைவைத்து படுக்கும் போதும் ராமாயணத்தில் இருந்தும், மகாபாரதத்தில் இருந்தும் தெய்வீக கதைகளைச் சொல்லி வளர்த்தார்.சத்ரபதி வீரசிவாஜியின் குழந்தை பருவத்தில் இருந்தே அவருடைய தாயார் ஜீஜிபாய் ராமாயணத்தில் உள்ள வீரசாகசங்களையும், மகாபாரதத்தில் உள்ள போர்களக் காட்சிகளையும் கதைகளைப் போல சொல்லி, தமது மகன் சிவாஜி வீர தீரம்மிக்க இளைஞனாக உருவாக்கினார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு அவரது தாத்தா மோதிலால்நேருவும், அவரது பாட்டியும் பல கதைகள் சொல்லியிருக்கிறார்கள்.

அதில் தேச விடுதலைக்கான போராட்ட நிகழ்வுகள் கலந்திருந்தன. அருமை மகளுக்கு கதைச்சொல்லி, தெளிவும், துணிவும் ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாட்டுக்காக சிறையில் இருந்த காலம். சிறைசாலையிலிருந்துக் கொண்டே மகளுக்கு உலகம்தோன்றிய கதை, மனிதநாகரிகம், நாடுகள், மொழிகள், உயிரினங்களின் கதை, இலக்கியம், அரசியல் என்று கடிதங்கள் மூலம் உலக ஞானம் ஊட்டினார் ஜவஹர்லால்நேரு.

கொலம்பஸ் சிறுவனாக இருந்த போது, அவனது உறவினர் ஒருவர் மாலுமியாக இருந்தார். அவர் கடல்பயணம் சென்று வந்து, கற்பனை கலந்து அலைகடலில் வீர தீர சாகசம் புரிந்து, பலநாடுகளுக்கு, கடல் மார்க்கமாக சென்று வந்ததாக கதை, கதையாக சொல்வார். அதைக்கேட்டு நம்ப தொடங்கிய சிறுவன் கொலம்பஸ், தமது எதிர்கால லட்சியமாக கடல்பயணம் செய்யவேண்டும், பலநாடுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் சின்ன வயதிலேயே கொலம்பஸ் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

சிறுவர்களுக்கு சொல்வதற்கு விதவிதமான நிறைய கதைகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். புத்திசாலிகள் கதை, கஞ்சர்கள் கதை, பேய்கள் கதை, வேடிக்கைக் கதைகள், மூடர்கள் கதை, பழமொழி கதைகள், பறவைகள் கதை, பேராசைக்காரர் கதை, விந்தைக் கதைகள், அறிவுக் கதைகள், முட்டாள்கள் கதை, மந்திரக்கதைகள், தந்திரக்கதைகள், மிருகக்கதைகள், ஊர் கதைகள், விகடக் கதைகள், வேதக்கதைகள், புராணக் கதைகள், பிரயாணக்கதைகள், தெய்வக் கதைகள், நீதிக் கதைகள், நொடிக் கதைகள், புதிர்க் கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லா கதைகள், ஈசாப்கதைகள், ஜென் கதைகள்,பீர்பால் கதைகள் என்று நாளைய தலைமுறைக்கு, குழந்தைகளுக்கு சொல்வதற்கென்று அருமையான, அழகான, தன்னம்பிக்கை, துணிச்சல், நற்பண்பு, வெற்றிக்கான வழியை, வாழும் கலையை உணர்த்தும் பல அற்புத கதைகள் இருக்கின்றன. ஆனால் கதைச் சொல்லிகளைத் தான் பார்க்க முடியவில்லை. முன்பு வீடுகளில் பெரியவர்கள், தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று இருந்தார்கள். இன்று தனிக்குடித்தன சமூகத்தில் அவை கதைகளாகி விட்டன. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, நற்பண்புகளை வளர்க்கக்கூடிய கதைகளை பெற்றோர்கள் கூற வேண்டும். இது அவர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும்.

சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்)Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker