நம் உடலை நோய்களின்றி பாதுகாக்கும் இயற்கை உணவுகள்
மனிதன் உள்பட ஒவ்வொரு ஜீவராசியும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு. உணவு இல்லையேல் நம் உடல் சோர்வடைந்து விடும். எந்த வேலையையும் பார்க்க இயலாது. மேலை நாடுகளில் ஒருநாள் உணவை 5 நேரங்களாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் காலை, மதியம், இரவு என்று 3 வேளைகளாக எடுத்துக் கொள்கிறோம். காலையில் இட்லி, தோசை, புட்டு, ஆப்பம், பூரி, பொங்கல் போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்கிறோம்.
மதியம் சாதம் மற்றும் சாத வகைகளை எடுத்துக் கொள்கிறோம். இரவு இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றை உட்கொள்கிறோம். இவற்றில் ஆவியில் வேக வைத்த உணவுகளை அதாவது இட்லி, புட்டு போன்றவற்றை உட்கொள்வது நல்லது என்கிறது மருத்துவம்.
எண்ணெய் வகைகளில் தயாரிக்கப்படும் தோசை, பூரி, புரோட்டா போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட வயதுக்கு மேல்எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது என்கிறது மருத்துவ ஆய்வுக்குழு. உணவில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை வைத்து மாவுப் பொருட்கள், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், நீர், தாது உப்புகள் என உணவை 6 வகைகளாக பிரிக்கலாம். அரிசி, கோதுமை, சர்க்கரை, உருளைக்கிழங்கு ஆகியவை உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்தியை தரும்.
எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை கொழுப்பு சக்தியை தரும். முட்டை, பால், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், இறைச்சி ஆகியவை புரத சக்தியை தரும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவை நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் நீர்சத்து அதிகம் தேவை. ஆகவே, தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இன்றைக்கு துரித உணவுகள்( பாஸ்ட் புட்) உலகை ஆட்கொண்டு வருகின்றன. இதுபோன்ற சத்துகளற்ற உணவுகளுக்கு பெரும்பாலானோர் அடிமைகளாக மாறி உடலை கெடுத்து வருகின்றனர். இவ்வாறான உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
ரசாயனங்கள் சேர்க்காத கைக்குத்தல் அரிசி, கம்பு, சோளம், அவல், முளைகட்டிய பயிர்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை உண்ணவேண்டும். நம் உடலை நோய்களின்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயற்கை உணவுகளை உட்கொள்வதே சிறந்தது.