நோயை விரட்டும் முருங்கை…
முருங்கைமரத்தின் புகழை அதன் பயனை அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. தான் வலுவிழந்தாலும் பரவாயில்லை. தன்னை வளர்ப்பவர்; வலுவோடும் நல்ல உடல் திறனோடும் வாழவேண்டும் என்று நினைப்பவைதான் இந்த முருங்கை மரங்கள். “முருங்கை நட்டவர்; வெறுங்கையோடு நடப்பார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. பலன் தரக்கூடியவைதான் பழமொழிகள். மனிதன் தவறாகப் புரிந்துகொண்டு, முருங்கை வைத்தால் வெறுங்கைதான் வறுமைதான் என்று எண்ணி நிறைய வீடுகளில் முருங்கையும் வளர்ப்பதில்லை. வீட்டுக்கு முன்னால் வைத்தால் முனி வரும் பின்னால் வைத்தால் பேய் வரும் என்று இன்றும் கிராமப்புறங்களில் முருங்கை மரங்களை வெட்டிவிடுபவர்களும் இருக்கிறார்கள். முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான் என்பது பழமொழி. இதற்கு மனிதன் முதிர்ந்த வயதிலும் கோலூன்றாமல் ஆரோக்கியமாக இருகைகளையும் வீசிக்கொண்டு நடப்பான் என்று பொருள்.
முருங்கை மரத்தில் இலை, பூ, காய் என எல்லாம் மருத்துவ குணமும் அதிக உயிர்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது. முருங்கைக்காய் சாம்பார், கீரை தொவட்டல் என பல வகையில் உதவும் முருங்கையில் நல்ல இரும்புச்சத்து உள்ளது. முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்து பழமொழி. முருங்கை கீரையில் தயிரில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிக புரதசத்தும் ஆரஞ்சு பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிக பொட்டாசியமும் கேரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு வைட்டமின் ‘ஏ’யும் பாலில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிக கால்சியமும் உள்ளது.
முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து சூப்வைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுக்கு நல்லது. பெண்கள் முருங்கை கீரையை வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான பிரச்சினை தீரும். வைட்டமின் ஏ சத்து நிரம்பி இருப்பதால் ஒளிபடைத்த கண்ணுடனே வளம் வரலாம். ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு நீக்க மிகவும் உதவியாக இருப்பது முருங்கை இலை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி உடலைப் பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு உள்ள மலட்டுத் தன்மை நீங்கவும் இளமைப் பொலிவு பெறவும் முருங்கை முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் பச்சையான முருங்கை இலைச்சாறு ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு அதில் பாதி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட உடல் தொப்பை மறைந்து நல்ல தேகம் பெறலாம். சிறிதளவு முருங்கை இலைச்சாறுடன் உப்புக்கரைசல் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் சரியாகும். இன்றைய உலகில் மலச்சிக்கலும், மனச்சிக்கலும் இடியாப்ப சிக்கலாய் மாறி இம்சை செய்கிறது. மனித உடம்பிற்கு தேவையான இருபது அமினோஅமிலங்களில் பதினெட்டு முருங்கை கீரையில் உள்ளது. மாமிசத்தில் இருப்பதைப் போன்ற புரதச்சத்துகளும் இதில் உள்ளது. முருங்கை கீரையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம்.
முருங்கை பொடியில் வைட்டமின் கே.ஏ.இ கால்சியம், ஆன்டி ஆக்சிடனஸ் உள்ளது. முருங்கை பவுடர்; களைப்பு மற்றும் சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். கஷாயமாகவும் சாப்பிடலாம். முருங்கை இலை சூப் மற்றும் கசாயம் மூட்டுவலி, முதுகு வலியை நீக்கி எலும்புக்கு நல்ல பலத்தை தருவதுடன் உறுதியுடனும் விளங்க உதவிபுரிகிறது. முருங்கைப்பூ பொரியல் மற்றும் கூட்டு செய்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். ஒரு முருங்கை கிளையை இலகுவாக ஒடித்த மனித கை, முருங்கை கிளையிடம் சொன்னதாம் பார்த்தாயா, நான் உன்னை எப்படி உடைத்தேன் என்று” சொன்னது. நான் எனது இரும்பு சத்துகளையெல்லாம் உனக்கு கொடுத்ததால் தான் உன்னால் என்னை சுலபமாக உடைக்க முடிகிறது என்று சொன்னது முருங்கை கிளை.
செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும் மறமே
நெருங்கையிலை யொத்தவிழி நோழையே! நல்ல
முருங்கை யிலையை மொழி. என்ற அகத்தியர்; பாடலின் பொருளானது, ஜீரணக்கோளாறுகள், மந்தநோய், உடல்சூடு போன்றவை குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி, மயக்கம், கண்நோயும் விலகும் என்று பொருள்படுகிறது.
பல பிரமிப்பான நன்மைகளைத் தரும் பிரமாதமான இந்த பிரம்ம விருட்சம் நாடெங்கும் நடப்பட்டு நாளெல்லாம் மக்கள் நன்மைகளைப் பெறவேண்டும்.