மற்றவர்களை கவர்வது எப்படி?
பிறரை எளிதில் கவர்வதற்கான சில உளவியல் ஆலோசனைகளை தருகிறார்கள், உளவியல் நிபுணர்கள். யாரை சந்தித்தாலும், யாருடனும் பேசும் போதும் எதிரில் இருப்பவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுங்கள். நம்மை பார்த்தவுடன், எளிதல் புன்னகைப்பவர்களை கூட நம்பி விடலாம். ஆனால் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பவர்களை அத்தனை எளிதில் நம்பி செயலில் இறங்காதீர்கள் என்கிறது, உளவியல் தத்துவம்.
ஒருவரிடத்தில் பேச தொடங்கும் முன்பாக கூடுமானவரையில் முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டே உரையாடலை தொடங்குங்கள். சிரிப்பதினால் உங்கள் முகத்தில் 17 தசைகள் இயங்கி, உங்களுக்குள் புத்துணர்ச்சியை வரவழைக்கிறது. உங்கள் பேச்சை கேட்பவர்களிடமும் உற்சாகத்தை கொடுத்து, நீங்கள் பேசுவதை கவனமாக கேட்க வைக்கிறது. உரையாடலில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே இது புத்துணர்ச்சியை தரும். எவ்வளவு கடினமான விஷயங்களை பேசினாலும், அதை எளிதாக செயல்படுத்த வழிவகுக்கும்.
நீங்கள் பேசுவதை எதிரில் இருப்பவர் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார் எனில், அவர் அதன் சாதக பாதகங்களை உள்மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார் என எண்ணுங்கள்.. பேசி முடிக்கும் வரையில் அமைதி காக்கிறார் எனில், எந்த ஒரு விஷயத்திலும் இறங்கும் முன்பு, தீர்மானமாக அதை பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடுபவராக இருக்கக்கூடும்.. ஆனால், பிரச்சினை ஏற்படும் சமயத்தில் ஒருவர் அமைதியாக இருப்பது, அவர் தவறு செய்ததற்கான அறிகுறி என்றோ, அல்லது பிரச்சினைகளில் இருந்து லாவகமாக எப்படி தப்பித்து செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் எளிதில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஒருவரிடத்தில் பேசும் போது, அவர்களின் வலது காதில் கேட்கிற மாதிரியான திசையில் நின்று கொண்டு, நீங்கள் என்ன கூறினாலும் பெரும்பாலும் அவர்கள் அதை கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார்கள். வலது காது வழியே கேட்கிறவைகளை நிறைவேற்றி வைக்கவே வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு மூளை பெரும்பாலும் கட்டளையிடுகிறது. பெண்கள் எளிதில் தவறுகளை மன்னித்து விடுவார்கள். ஆனால், அத்தனை சீக்கிரத்தில், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த தவறை மறக்கவே மாட்டார்கள்.
இதே விஷயத்தில் ஆண்கள் தவறுகளை அத்தனை சீக்கிரத்தில் மன்னிக்க மாட்டார்கள். ஆனால், அந்த தவறை கூடிய விரைவில் மறந்து விடுவார்கள். ஆண்களுக்குள் பிரச்சினைகள் அதிகமாக வருவதற்கான காரணம் இது தான். பெண்கள், தங்களுக்கு அந்த செயல் பிடிக்கவில்லை என்றாலும், சிரித்து, மழுப்பி, தவறை மன்னித்து, அதே சமயம் மறக்காமல் அந்த சம்பவத்தை கடந்து செல்கிறார்கள்.
நாம் உண்மையை பேசும் போது இயல்பாகவே கொஞ்சம் குரலை உயர்த்தி சொல்வோம். அதே சமயம் நமது கை விரல்களை அசைத்து அசைத்து கதை சொல்வதை போன்றே சொல்வோம். அதே சமயத்தில் நாம் சொல்கிற விஷயம் பொய் என்றால், நம் கைகள் அசையாது வார்த்தைகள் மட்டுமே வெளிப்படும். கண்களை நேருக்கு நேராகவும் அத்தனை எளிதில் நம்மால் பார்க்க முடியாது. நாம் சொல்வது பொய் என்று நமது மூளைக்கு தெரிந்ததினால் இவ்வாறு நிகழ்கிறது.
எல்லோருடைய வாழ்க்கையில் பெரும்பாலான சிக்கல்கள் இரண்டே இரண்டு காரணங்களால் தான் ஏற்படுகின்றன. ஒன்று நீங்கள் சிந்திக்காமல் செயல்படுவீர்கள் அல்லது செயல்படாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். கூடுமானவரை ஒருவரிடம் பேசும் போது, நன்றாக நிமிர்ந்து நின்று, கம்பீரமாகவும், இயல்பாகவும் பேசுங்கள். இந்த உளவியல் தத்துவங்களை நினைவில் வைத்திருந்தால் எளிதில், எதிரில் நிற்பவரின் மனதில் இடம் பிடிக்கலாம்.