சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்
இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 65 ஆயிரம். இதில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேருக்கு டயாலிசிஸ் அல்லது கிட்னி மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரக பாதிப்புக்கு வந்த பின் சிகிச்சை பெறுவதை விட வருமுன் காப்பதே உடல் நலத்தை காக்கும் பொருளாதார இழப்பையும் தடுக்கும் என்கிறார் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.சம்பத்குமார்.
வலி நிவாரணி
மனித உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு மகத்தானது. வயிற்றுப்பகுதியில் அவரை விதை போன்ற வடிவத்தில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இவை உடலின் கழிவுகளை நீக்குவது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது உடலின் நீர் மற்றும் உப்பு அளவை சீராக நிர்வகிப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது வைட்டமின் ‘டி‘ யை எடுத்துக் கொடுத்தல் போன்ற உடல் செயல்பாட்டின் முக்கியமான வேலைகளை செய்கின்றன.
சிறுநீரக செயலிழப்பு என்பது ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும். எந்த வயதிலும் சிறுநீரக செயலிழப்பு வரலாம். குழந்தைகளை பொறுத்தளவில் மிகவும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் சிறுநீரகம் செயலிழப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
சர்க்கரை வியாதியும் உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரக செயலிழப்புக்கு முதன்மையான காரணங்கள். உடலில் நீர் வறட்சி சாதாரண வலிகளுக்கு கூட தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகள் ஊசிகளை பயன்படுத்துதல் சிறுநீரக கல் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஆகியவை சிறுநீரக செயலிழப்புக்கு அடுத்த நிலை காரணங்களாகும்.
மறந்து போன உடல் உழைப்பு வறுத்த பொறித்த செயற்கை உணவுகள் மன அழுத்தம் மாசுபட்ட சுற்றுப்புற சூழல் தான் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உடல் பருமன் உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கும் காரணம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றில் 30 பேருக்கு சிறுநீரக செயலிழப்பும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து தாக்கும் மாரடைப்பு போல சிறுநீரக செயலிழப்பும் அறிகுறிகளே இல்லாமல் முற்றிய நிலையில் தான் தெரிய வருகிறது. சிறுநீர் அளவு குறைதல் முகம் கை கால் வீக்கம் சிறுநீரில் ரத்தம் கலந்து போவது சிறுநீர் தாரையில் எரிச்சல் சிறுநீர் மெதுவாக வெளியேறுதல் இரவு நேரங்களில் அதிக அளவு சிறுநீர் கழித்தல் முதுகு வலி மூச்சு விடுவதில் சிரமம் அதிகமான உடல் சோர்வு வயிற்று பகுதியில் வலி தூக்கமின்மை உடல் உறவில் நாட்டமின்மை போன்றவை சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள நிலையின் அறிகுறிகளாகும்.
சிறுநீரில் புரதமும் சிவப்பணுக்களும் அதிக அளவில் வெளியேறுவது ஒரு முக்கிய அடையாளமாகும். ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் கிரியேட்டினின் உப்புகளின் அளவை பரிசோதனை செய்து பார்த்து சிறுநீரகம் எந்த அளவுக்கு பாதிப்படைந்துள்ளது என்பதை அறியலாம். சில நோயாளிகளுக்கு அல்ட்ரோசோனகிராம் மற்றும் சிடி ஸ்கேன் செய்து பாதிப்பின் அளவை அறிகிறோம்.
நீங்கள் சர்க்கரை நோயாளியாக பாரம்பரியமாக கிட்னி பெயிலியர் பாதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் சிறுநீரகம் பாதிப்படைவதை தடுக்கலாம். உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்த்தால் சிறுநீரகங்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைவதை தடுக்கலாம். தினமும் உடற்பயிற்சி அளவான சத்தான இயற்கை உணவுகள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது ஆகியவை சிறுநீரகங்கள் பாதிப்படைவதையும் தடுக்கும்.
உணவில் கொழுப்பு அதிகம் சேரும் போது இதய தாக்குதல் வரலாம். இது சிறுநீரகத்தையும் பாதிக்கும். எனவே கொழுப்பு உணவுகளை தவிர்த்தல் சிறுநீரகங்களுக்கு நல்லது. புகைப்பிடித்தல் சிறுநீரகங்களுக்கு மிகவும் கேடு. இது இதயத்தையும் பலவீனமாக்கும். புற்றுநோய்க்கும் காரணமாகும்.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக செயலிழப்புக்கு சிறுநீரக கற்களும் ஒரு காரணம். அதிக அளவில் இறைச்சி உணவுகள் உப்பு பால் பொருட்கள் ஆகியவை சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும். எனவே உணவில் இவற்றை எல்லாம் அளவோடு வைத்துக் கொள்ளவும். சிறுநீரக கற்கள் இருப்பது தெரியவந்தால் உடனே அகற்றி சிறுநீரகத்தின் செயல்பாட்டை சரியாக பராமரிக்க வேண்டும்.
அவ்வப்போது உடல்நல பரிசோதனை மேற்கொண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது போன்ற பரிசோதனைகள் சிறுநீரக செயல் இழப்பு முற்றிய நிலையை அடைவதை தவிர்க்க உதவும். குறிப்பாக மைக்ரோ ஆல்புமினேரியா பரிசோதனைகள் இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியையும் கண்டறிய உதவும். வயிற்றை சுற்றிய பகுதிகளில் வலி இருந்தால் எக்காரணம் கொண்டும் கடைகளில் வலி நிவாரணிகளை வாங்கி சாப்பிடக் கூடாது. இது சிறுநீரகம் தொடர்பான பாதிப்பாக இருந்தால் இந்த வலி நிவாரணிகள் வேகமாக சிறுநீரகத்தை செயலிழக்க செய்து விடும்.
எச்சரிக்கை
இதய பாதிப்பு இதய செயலிழப்பு திடீர் மாரடைப்பு மற்றும் இதய நாள நோய்களுக்கு முன்னோடியாக சிறுநீரக பாதிப்பு உள்ளது என்பதால் அனைவரும் சிறுநீரகங்களை சரியாக பராமரிப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.