சைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும்
சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது. இது சரியே. ஆனால் சைவ உணவில் இருக்கக்கூடிய சில சத்து குறைபாடுகளை கூடுதல் ஊட்ட மளிப்பின் மூலம் சரி செய்து விட்டால் போதும். சைவ உணவு மனிதனுக்கு அமிர்த உணவு ஆகிவிடும். அந்த குறைபாடுகளின் நிவர்த்தியினைப் பார்ப்போம்.
வைட்டமின் பி 12: வைட்டமின் பி 12 சத்து குறைபாடு யாருக்கும் ஏற்படலாம். ஆயினும் இக்குறைபாடு சைவ உணவு முறை கொண்டவர்களிடம் அதிகம் காணப்படுகின்றது. மேலும் வயது கூடும் பொழுது வைட்டமின் பி 12 ஐ உணவுப் பொருளிலிருந்து குடல் உறிந்து எடுத்துக்கொள்ளும் திறன் குறைகின்றது. எனவே மருத்துவர் அறிவுரைப்படி வைட்டமின் பி 12 சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
நரம்பு பிரச்சினை, சோர்வு, சிந்திக்க இயலாமை இவையெல்லாம் பி 12 சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகள். பி 12 சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிவப்பு ரத்த அணுக்கள் குறைபாடு இருக்கும். உடலுக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பதில்லை. சாதாரணமாக அதிகம் காணப்படும் குறைபாட்டினை சத்து மாத்திரை மூலம் எளிதில் சரி செய்து விடலாம். ஆனால் இதனை சரி செய்யாது விட்டால் நரம்புகளை பாதிக்க வல்லது. வெளிறிய தோல், நெஞ்சு படபடப்பு, கண் பார்வை கோளாறு இருந்தாலும் மருத்துவரை அணுகி பி 12 சத்து உள்ளதா என அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
வைட்டமின் டி3: டி3 சத்து கொழுப்பினை கரைக்கும் , கால்சியம் சத்தினை உறிஞ்சும் உந்துதல் சக்தி கொண்ட வைட்டமின். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை ஞாபகத்திறன், சதை பராமரிப்பு முதல் எலும்பு பராமரிப்பு, பாஸ்பரஸ் சக்தியினை எடுத்துக் கொள்ளுதல், பற்கள் ஆரோக்கியம், நரம்பு மண்டல மற்றும் மூளை ஆரோக்கியம் நுரையீரல், இருதய ஆரோக்கியம் என அநேக பலன்களுக்கு அவசியமாகிறது.
இந்த டி சத்து இன்று கூடுதல் அளவு தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. சில சிறிதளவு உணவில் இருந்தும், இள சூரிய வெய்யிலில் காலை, மாலை உடலில் சூரிய ஒளி படும்படி நிற்பதிலும் இருந்து கிடைக்கின்றது. விவி கதிர் பாதிப்பினையும் தவிர்க்க வேண்டும். இதற்கு டி சத்து மாத்திரை (அ) வேறுவித வடிவில் உட்கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார்.
* ஒமேகா 3: இதனை பல சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
* கர்ப்ப காலத்திலோ, சிறு வயதிலோ அயோடின் குறைபாடு அதிகம் ஏற்பட்டால் மாற்ற முடியாத மூளைச் செயல்பாடு திறன்களை குறைக்கும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அயோடின் குறைபாடு தைராய்டு ஹார்மோன் குறைபாட்டினை ஏற்படுத்தும்.
* அதிக சக்தியின்மை, வறண்ட சருமம், கை, கால் களில் குறுகுறுப்பு, மறதி, மனச்சோர்வு, எடை குறைதல் போன்ற பாதிப்புகள் தைராய்டு குறைபாட்டால் ஏற்படுபவை.
சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு அயோடின் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால் அவர்களுக்கு பால், பால்சார்ந்த உணவுகள் மற்றும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இவைகள் அறிவுறுத்தப்படுகின்றன. இரும்பு சத்து: இரும்புச்சத்துதான் டி.என்.ஏ. மற்றும் சிகப்பு ரத்த அணுக்களுக்கு பொறுப்பாகின்றது. ஆக்ஸிஜனை உடல் முழுவதும் ரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்கின்றது. உடலுக்கு தேவையான சக்தியையும் அளிக்கின்றது.
குறைந்த அளவு இரும்புச்சத்து உடலில் இருந்தால் சோர்வு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும், பெண்கள், கர்ப்பினி பெண்கள் இவர்களுக்கு கூடுதலாக இரும்புச்சத்து தேவைப்படுகின்றது. சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் பீன்ஸ், பட்டாணி, உலர் பழங்கள், கொட்டைகள், விதைகள், இரும்புச்சத்து சேர்க்கப்பட்ட உணவுகள், தானிய உணவுகள் இவைகளை நன்கு உண்ண வேண்டும்.
இரும்பு பாத்திரங்களில் சமைப்பது நல்லது. உணவோடு சேர்த்து காபி, டீ, பருகக் கூடாது. வைட்டமின் சி சத்து தேவையெனில் மருத்துவ ஆலோசனையோடு பெற்றுக்கொள்ள வேண்டும். கவனம்: மிக அதிக இரும்புச்சத்து ஆபத்தானது. வலிப்பு, உறுப்புகள் பாதிப்பு, கோமா என கொண்டு செல்லும். எனவே எதனையும் மருத்துவ ஆலோசனை இன்றி செய்யக்கூடாது.