இந்த உலகத்தை எதிர்கொள்ள குழந்தைக்கு சொல்லித்தரவேண்டியவை
குழந்தை இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஒரு தாய் தான் சொல்லித்தர வேண்டும். நமது அனுபவங்களை நமது குழந்தைக்கும் சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழியில் வழிநடத்துவது அவசியம். அதற்காக குழந்தைக்கு எதிர்மறையான எண்ணங்களை திணிக்கக்கூடாது. இங்கு உங்கள் குழந்தைக்கு வாழ்க்கையில் கற்பிக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன என்று கொடுக்கப்பட்டுள்ளது.
உறவுகளை மேம்படுத்த ஒவ்வொருவரும் தன்னைத்தானே நேசிக்க வேண்டியது அவசியம். நமக்கு இருக்கும் தோற்றம், நிறம், அழகு, செயல், அறிவு, குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் நாம் நேசிக்க வேண்டியது அவசியம். தன்னைப்பற்றி இழிவாக எண்ணம் கூடாது. இதனை குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது அவசியம்.
இந்த உலகம் மிகவும் அழகானது. அதை பார்த்து ரசிப்பது அவசியம். உங்கள் குழந்தைகளுக்கு இந்த உலகின் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை கொடுங்கள். பயணங்களை ஊக்குவிப்பதன் மூலம் அறிவு அதிகரிக்கும்.
நல்ல நண்பர்கள் பலரை வாழ்க்கையில் பெறுவது மிக அவசியமானது. உன் நண்பர்களை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பது போல, நல்ல நண்பர்கள் இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்பதை உங்கள் குழந்தைக்கு புரிய வையுங்கள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கும். அதை நோக்கி பயணிப்பதே நமது கடமை. இதனை குழந்தைகளுக்கு தகுந்த வயதில் சொல்லித்தர வேண்டும். அவர்கள் வாழ்வில் குறிக்கோள்களை உருவாக்கிக்கொள்ள பெற்றோர்கள் உதவி செய்ய வேண்டும்.
குழந்தைகள் வளர்ந்த பின்னர் காதல்வயப்படுவது இயல்பு தான். அவர்களுக்கு உண்மையான காதல் உன்னை தேடி வரும் வரை காத்திரு. ஏதேனும் ஒரு காதலில் இணைந்துவிடாதே என்று சொல்லித்தர வேண்டும். வயது கோளாறில் வாழ்க்கையை தொலைப்பவர்கள் ஏராளம். எனவே இதை பற்றி குழந்தைகளிடம் வெளிப்படையாக பேசுவதில் தவறில்லை.