எடிட்டர் சாய்ஸ்

மனிதநேயமே உலகை உயர்த்தும்

Family, Relationships, குடும்பம், உறவுகள்,

வெயிலின் ஒளி எந்தப் பொருள் மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றும் என்றான் ஆங்கிலப் பெருங் கவிஞன் ஷெல்லி. அதேபோல் உள்ளொளி என்னும் தூய அன்புடன் பிறருக்கு நாம் கொடுக்கிற எந்தப் பொருளும் அதி உன்னத மதிப்புடையதாகவே கருதப்படும்.

பசிக்கின்ற போது கிடைக்கிற உணவு, பழைய சோறாக இருந்தாலும் அது தேவாமிர்தம். தேவைப்படுகிற உதவி கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டும். அதுதான் பெறுகிறவர்களுக்குப் பேருதவி, தருகிறவர்களுக்கும் பெருமை. சிலரை பலவான்கள் என்று எண்ணுகிறோம். பாதுகாப்புக் கேடயங்கள் என்று நம்புகிறோம். சில சமயங்களில் அவர்களே பலவீனர்களாக மாறிவிடுவதும் உண்டு.



பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்மார்கள். ஐவருமே பராக்கிரமசாலிகள்தான். ஆனால் துச்சாதனன் அவள் ஆடையை உரியும் போது அந்த ஐந்து பேரும் அவளுக்கு உதவ முடியவில்லையே. துரியோதனன் சபையில் நிறைந்திருந்த பெரியோர்கள் அத்தனை பேரிடமும் அவள் நியாயம் கேட்டுக் கதறிய போது, அவர்கள் தலைகவிழ்ந்து நின்றார்களே தவிர, அவர்களுக்கு உதவி புரிய முன்வரவில்லையே, முற்றிலும் நிராதரவான நிலையில், இறுதியாக அவள் கைகளை உயர்த்தி பரந்தாமனை அழைத்தாள். அவன் செய்த உதவிதான் அவள் மானத்தைக் காப்பாற்றியது.

நாம் பெரிதாக நம்பியிருந்தவர்கள் நம்மைக் கைவிட நேரிடும்போது நம் மனம் கலக்கமடைவது இயல்புதான். எனினும் நம்பிக்கை இழ்ந்துவிட வேண்டாம். ஏனெனில், நம்பிக்கை என்னும் வேரிலிருந்துதான் நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.உடல் நலத்திற்கு வெயில் எப்படி அவசியமோ, அதே போல் வாழ்வின் எழுச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கை என்னும் வெளிச்சம் அவசியம்.

நம்பிக்கை என்பது துணிச்சலின் அடையாளம். துணிவுள்ளவனையே அறிவுள்ளவன் என்று நமது முன்னோர்கள் மதித்தார்கள். உதவி கிடைத்தாலென்ன கிடைக்காவிட்டாலென்ன! எந்தச் சூழ்நிலையையும் மேற்கொள்ள முடியும் என்று உறுதிபடச் சொல்லக் கூடிய மனோதிடம் நமக்கு வேண்டும். வெற்றி, முன்னேற்றம், மகிழ்ச்சி அனைத்தும் நம் கைகளில்தான் இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருந்தால் நமக்கு வரவேண்டியவை தாமாக வந்து கொண்டிருக்கும். எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.



சின்ன உதவியோ பெரிய உதவியோ மனமுவந்து செய்யவேண்டும். அதற்கு மிகப்பெரிய பலன் உண்டு. பிறருக்குப் பரிசு கொடுக்கும்போது கூட சிந்தித்துக் கொடுக்கவேண்டும். கொடுக்கிற பரிசு பெறுகின்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதுவே மிகப்பெரிய உதவிதானே!விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காப்பதற்காகச் சென்ற ஸ்ரீராமன், அப்படியே மிதிலை சென்றான். அங்கு சிவதனுசை முறித்து சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினான்.

நாட்டு மக்கள் அனைவரும் ராமனை பணிந்து வாழ்த்தி பலப்பல பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தனர். மித்ரபந்து என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் இருந்ததோ, ராமனுக்கென்றே அளவெடுத்து செய்தது போன்ற அழகான இரு பாதுகைகள்.

ராமனுக்குக் கொடுப்பதற்காக மற்றவர்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களைப் பார்த்த மித்ரபந்துவுக்கு மிகுந்த வருத்தம். எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப காலணிகளையா தருவது என்ற கவலை.ராமனைப் பார்க்காமலேயே திரும்பிவிட நினைத்து மெதுவாக அங்கிருந்து நழுவப் பார்த்தான்.

அதனை கவனித்துவிட்ட ராமபிரான். அவனை அருகே அழைத்தான். உன்னுடைய உண்மையான உழைப்ால் உருவான உன் பரிசுதான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே என்று ராமன் புன்னகையுடன் சொல்ல மனம்நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமன் வனவாசம் செய்ய புறப்பட்ட போது, தாயிடம் வேண்டினான். ‘தாயே வனவாசம் செய்யும்போது எதையுமே எடுத்துச் செல்லக் கூடாதுதான். எனினும் இந்த பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங்கள்’ என்று கேட்டு அனுமதி வாங்கினான்.



கூட்டத்தில் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தான் மித்ரபந்து. ராமன் அவனை நோக்கி விலை உயர்ந்த எந்த பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ எனக்களித்த காலணிகள்தான் என் கால்களைப் பாதுகாக்கப் போகின்றன என்றான்.மித்ரபந்துவின் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சி கண்களில் வழிந்தது.

பின்னர், அந்தப் பாதுகைகளைக் கொண்டுதானே பரதன் அரசாண்டான். நல்ல மனதோடு கொடுப்பது எதுவாயினும் அது மேன்மை பெறும். பெறுவது இன்பம், கொடுப்பது பேரின்பம். ஒருவரை ஒருவர் தாங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் வாழ்வு உன்னதமானது. குடும்பமோ சமூகமோ உதவி புரிகின்ற உள்ளம் கொண்டவர்கள்தான் கூடிவாழ முடியும். உதவும் பண்பு வளர்ந்தோங்கிவிட்டால் சுயநலம், பேராசை, திருட்டுத்தனம், போன்ற தீய பண்புகள் இல்லாமல் போய்விடும்.

அதெல்லாம் இருக்கட்டும்! உண்மையைச் சொல்வதெனில், உதவுகின்ற உள்ளங்கள் இருக்கின்ற இடங்கள் எவையோ அவையே கடவுளின் சொந்த பூமி.அதனால்தான் உடல்நோயற்று இருப்பது முதல் இன்பம், மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம், பிற உயிர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம் என்று ஞானியர் சொன்னார்கள்.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சிறு உதவியாவது செய்ய வேண்டும். மனதில் அந்த தீர்மானத்தைக் கொள்வது நல்ல விஷயம். எந்த பேருந்தில் ஏறுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவரை, சரியான பேருந்தில் ஏற்றிவிடுவதுகூட பேருதவிதான். குளிக்கப் போகின்ற ஒவ்வொருவனும் குளத்திலிருந்து நாலு கை மண் அள்ளிப் போட்டுவிட்டுக் குளிக்க வேண்டும் என்கிறது, ஸ்வல்ப தர்மம். அதை பின்பற்றினால் குளம் தூர்வாரப்பட்டுவிடும். தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாது.

அவனவன் தன்தன் வீட்டுக் குப்பைகளை தெருவில் கண்டபடி வீசி எறியாமல். குப்பைத் தொட்டியில் போட்டால் ஊர் சுத்தமாகிவிடும். இயன்றவரை மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் பருவம் தப்பாமல் மழைபெய்யும். மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல் ஒட்டுமொத்த சமூக நலனுக்காக இயற்கையை பாதுகாத்திட நாம் உதவி புரிவதும் மிக அவசியம். உதவும் மனப்பான்மை பெருகப் பெருக மனிதநேயமும் மனித சமூகமும் செழிப்படையும்; உலகம் சீர்பெறும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker