ஆரோக்கியம்

மழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்

மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.



டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை இந்த இடங்களில் நீர் தேங்கினால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றிவிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால், இவ்வாறு தண்ணீர் தேங்குவது நமக்கு பெரிதாக தெரியாது. அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம். எனவே, டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்கள் அதில் முட்டை இட்டு உற்பத்தி ஆகக்கூடும். கொசுக்கடியில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வது நல்லது. இதற்கு ஜன்னல்களில் வலை பொருத்த வேண்டும்.

கொசுவர்த்தி சுருள், மேட் போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். அவர்கள் சிறிதளவு கிரீம் தடவி கொள்ளலாம். மேலும், படுக்கையில் கொசுவலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் முதலில் மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக அந்த பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், கொசு மருந்து அடித்தல், நீர்த்தொட்டி, கிணறு ஆகியவற்றில் மருந்து ஊற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்.



காலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை இரண்டு நாளுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு நோய்க்கான பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனிப்பார்கள். தட்பவெப்பம் அடிக்கடி மாறும் சூழலில் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புகள் அதிகம்.

எனவே, வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம். மேலும், சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஐஸ் சேர்த்த ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker