குழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பது நல்லதா?
தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகுக்கு அறிமுகமாகும் குழந்தை, தாயின் அருகாமைக்குத்தான் ஏங்கும். தாய் தன் அருகில் இருப்பதை அங்கு இங்கு திரும்பிப் பார்க்க முடியாவிட்டாலும் வாசனை மூலமும், தொடுதல் மூலமும் தாயை உணர்ந்துகொள்கிறது. தாயின் அரவணைப்புக்குள் நிம்மதியாக தூங்கவும் விரும்புகிறது. அம்மா அருகில் இல்லை என்பதை உணர்ந்தவுடன் அழத் தொடங்கிவிடுகிறது. தொடுதலோ, வாசனையோ, அரவணைப்போ கிடைத்த பிறகே அமைதியாகிறது.
குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்க வைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா–பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலில் இருந்து தப்பித்து விடுகிறது. ஆனால் நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.
இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன. இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். முதல் குழந்தை தனிமைப் படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள் அன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.
தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யும் போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக் கொள்ளும். நாலு, ஐந்து வயதில் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும்.
அபூர்வமாய் இந்த வயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு. 7–8 வயதாகும் போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத் தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது.
இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்ல விதமாய் பெற்றோரே எடுத்துச் சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும்.
அவர்களின் மனோ ரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது. இதிலும் சிலர் டி.வி.யில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம்.
இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும் வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள். சிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்க வைக்க பக்குவப் படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும்.