உடலில் தேங்கும் நச்சுகளை எளிதாக வெளியேற்றும் முறை
‘டீடாக்ஸ் டயட்’ என்ற வார்த்தை சமீபகாலத்தில் டிரெண்டாகி வருகிறது. அது என்ன டீடாக்ஸ்? உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான மற்றும் சுத்தமான உணவுகளின் மூலம் வெளியேற்றுவதே ‘டீடாக்ஸ்’.
உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எடை குறையும். அதிக ஆற்றலை உணர முடியும். தலைவலி மற்றும் உடல்வலிகள் நீங்கி களைப்பின்றி உற்சாகமாக உணரமுடியும். மலச்சிக்கல் பிரச்சினை தீரும். டீடாக்ஸ் டயட்டை பின்பற்றும் போது திரவ உணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும். அதாவது காய்கறி அல்லது பழ ஜூஸ், ப்ரூட் வாட்டர், எலுமிச்சைச்சாறு கலந்த கிரீன் டீ போன்றவையே பிரதானம். திட உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும். சில நேரங்களில் டீடாக்ஸ் டயட்டில், தேநீர், மலமிளக்கிகள், இனிமா போன்றவையும் பரிந்துரைக்கப்படலாம்.
டீடாக்ஸ் டயட் எப்படி வேலை செய்கிறது? என்று பார்த்தால், திட உணவுகள் எடுத்து கொள்வதைத் தவிர்ப்பதால் செரிமான மண்டலத்துக்கு ஓய்வு கிடைக்கிறது. அது இந்த ஓய்வை பயன்படுத்தி கொண்டு தன்னை தானே பழுதுபார்த்து கொள்கிறது. முன்பைவிட நன்றாக இயங்க தன்னை தயார்படுத்தி கொள்கிறது. கல்லீரலில் தேங்கும் நச்க்சுகள் வெளியேற்றப்படுகின்றன. சிறுநீரின் வழியே நச்சு வெளியேற்றம் நடப்பது தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது.
பெரும்பாலான டீடாக்ஸ் முறை ஒன்று முதல் மூன்று நாள்களுக்கு விரதம் இருப்பதில் இருந்து தொடங்கும். புதிதாக தயாரிக்கப்பட்ட காய்கறி அல்லது பழ ஜூஸ், ஸ்மூதீஸ், டீ மற்றும் தண்ணீர் சேர்த்த எலுமிச்சைப்பழச்சாறு இவற்றை மட்டுமே அருந்துவது. மூலிகைகளையும் சேர்த்துக்கொள்வது, முறையாக உடற்பயிற்சி செய்வது.
மது, சிகரெட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றை தவிர்ப்பது. ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளையும், செயற்கை உரங்கள் சேர்த்த உணவுகளையும் தவிர்ப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
நம் உடலில் இயற்கையிலேயே ‘டீடாக்ஸ் மெக்கானிசம்’ உள்ளது. சருமம், செரிமான மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்றவை உடலின் நச்சுக்களை வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேற்றுகின்றன. இதைத்தாண்டி உடல் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற பிரத்யேக செயல்முறைகள் தேவையில்லை.
நம் உடலில் உள்ள அதிசயமான ஓர் உறுப்பு கல்லீரல். பெரிய தொகையைச் செலவழித்து டீடாக்ஸ் முறைகளைப் பின்பற்றுவதற்கு பதில் முழு தானியங்கள், பல வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்வதன்மூலம் நச்சு நீக்கும் வேலையை கல்லீரல் இயற்கையாகச் செய்துவிடும்.
தயிர், பழைய சாதம் போன்றவற்றையும், பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் ஓட்ஸ் போன்றவற்றையும், நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா அதிகரிக்கும். உடலின் நச்சு நீக்க வேலையையும் சிறப்பாகச் செய்து விடும்.
முறையான உணவு, கூடவே கொஞ்சம் உடற்பயிற்சி இந்த இரண்டும் உங்கள் எடையைச் சரியான அளவில் வைத்திருப்பதோடு நோய்களையும் அண்டவிடாமல் பாதுகாக்கும்.