‘கிரீன் டீ’ எவ்வளவு பருகலாம்?
‘கிரீன் டீ’, பல்வேறு நன்மைகள் கொண்ட ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலானோர் கிரீன் டீயைத்தான் நாடுகிறார்கள். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கும், இதய நோயை கட்டுப்படுத்தும், வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தும், உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் என கிரீன் டீயின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேவேளையில் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்காக அதிகமாகவோ, அடிக்கடியோ கிரீன் டீ பருகுவது உடல் நிலையை பாதிக்கும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ பருகக்கூடாது. அப்படி பருகுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். காலையில் சாப்பிட்ட பிறகு கிரீன் டீ பருகுவதாக இருந்தாலும் ஒரு கப்புக்கு அதிகமாக பருகக்கூடாது.
உடலுக்கு இரும்பு சத்து மிக அவசியமானது. சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு தேவையான இரும்பு சத்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது. கிரீன் டீ அதிகமாக பருகும்போது அதிலிருக்கும் கேடசின்கள் இரும்பு சத்தை உறிஞ்சி எடுக்கும் அளவை குறைத்துவிடும். ஆகையால் அதிகமாக கிரீன் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும்.
கிரீன் டீ அதிகமாக பருகும்போது அதிலிருக்கும் காபின் அளவும் அதிகரித்து உடலுக்கு கேடு விளைவிக்கும். தூக்கமும் தடைபடும். தலைவலி பிரச்சினையும் உண்டாகும். அதிலிருக்கும் காபின் தலைவலிக்கு காரணமாவதோடு தலைச்சுற்றல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வழிவகுத்துவிடும். தினமும் இரண்டு அல்லது மூன்று கப் கிரீன் டீ பருகலாம். அதற்கு மேல் பருகக் கூடாது.