மகப்பேறு மருத்துவரிடம் பெண்கள் கேட்க தயங்க கூடாத விஷயங்கள்
திருமணத்திற்கு முன் அல்லது பின் பாலியல் பழக்கங்கள் மற்றும் வெஜினாவின் ஆரோக்கியம் குறித்த சந்தேகம், பயம் இருந்தால் அதை வெளிப்படையாகப் பேசுங்கள். உங்களுடைய பிரச்னைகளை விட பல வகையான கதைகள், பிரச்னைகளை தினம் தினம் அவர்கள் கேட்டிருக்கக் கூடும். எனவே என்ன நினைப்பாரோ என தயங்காமல் வெளிப்படையாகப் பேசுங்கள்.
சிலர் மருத்துவ ஆலோசனைகளின்றி மருந்தகங்களில் கருத்தடை மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும், எப்படி ,எப்போது எத்தனை நாள் சாப்பிட வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் குறித்து கட்டாயம் மகப்பேறு மருத்துவரிடம் உரையாட வேண்டும். அவரின் அறிவுரைப்படி மாத்திரைகளை பயன்படுத்துங்கள்.
திடீரென உடல் எடை அதிகரித்தல், மார்பகங்களில் பருக்கள், மாதவிடாய் அடிக்கடி தள்ளிப்போதல், அடி வயிற்றில் அடிக்கடி திடீர் வலி, மாதவிடாயில் மற்றவர்களைக் காட்டிலும் தாங்கமுடியாத வலி போன்ற சராசரி பெண்கள் உணராத வித்யாசமான பிரச்னைகளை நீங்கள் உணர்கிறீர்கள் எனில் கட்டாயம் அதை மகப்பேறு மருத்துவரிடம் சொல்லுங்கள்.
வெஜினாவில் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம், அரிப்பு, எரிச்சல் உண்டாகிறது எனில் அதை சாதரணமாகக் கடந்துவிடாமல் மருத்துவரிடம் பேசுங்கள். அவை அதிகமாகும் முன்னரே கவனித்து முறையான சிகிச்சை பெறுவது அவசியம்.
உடலுறவு கொள்ளும்போது வலி, இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகளை மருத்துவரிடம் தயங்காமல் பகிருங்கள். அதேபோல் எவ்வளவு முயற்சித்தும் கருத்தரிப்பதில் பிரச்னை,சந்தேகங்கள் இருந்தாலும் அதைக் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. வெஜினாவின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மருத்துவரிடம் வெளிப்படையாகப் பேசுவதே நல்லது.