ஆரோக்கியம்மருத்துவம்

நலம் தரும் சைவ உணவுகள்

குட்டீஸ், உங்களை அம்மா மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லும்போது அவர் பல அறிவுரைகள் சொல்லுவார். காய்கறிகள், கீரைகளை நிறைய சாப்பிடுங்கள். துரித உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. உண்மையில் துரித உணவுகளும், அசைவ உணவுகளும் உடல் நலனுக்கு பல்வேறு இடை யூறுகளை உருவாக்குகின்றன. சைவ உணவுகள் எளிதாக செரிமானம் ஆவதுடன், பல்வேறு ஆரோக்கிய பண்புகளை உடலில் வளர்ப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இன்று (நவம்பர்1) உலக சைவ உணவு தினமாகும். இன்றைய தினத்தில் சைவ உணவு பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோமா?சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடித்து உடல் மெலிவதைவிட சைவ உணவு, உடல் எடை குறைய சிறந்த வழியாக கருதப்படுகிறது. மேலும் மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்று நினைக்கும் நாகரிக முதிர்ச்சியின் காரணமாகவும் பலர் அசைவ உணவை தவிர்க்கவும், சைவ உணவுக்கு மாறவும் செய் கிறார்கள்.

சைவ உணவுகள் எல்லா உயிரினங்களுக்குமான உணவாகும். இறைச்சி, முட்டைகள், மீன்கள் மற்றும் பால் போன்றவை மற்ற உயிரினங்களின் உடைமைகளாகும். அவை உணவுப்பொருட்களல்ல. உதாரணமாக பால், மாடுகளின் கன்றுகளுக்கான உணவாகும். முட்டைகள் பறவைகளின் இனப்பெருக்க பொருளாகும். மற்ற உயிரினங்களை அழித்து பெறும் இறைச்சியும் எந்த உயிரினத்திற்குமான உணவு இல்லை என்பது சைவ உணவு சித்தாந்தவாதி களின் கருத்தாகும்.

ஆரோக்கியம் பெற விரும்புபவர்களுக்கு அசைவம் மற்றும் கொழுப்பு உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் மருத்துவர்களின் முக்கியமான ஆலோசனையாக இருக்கிறது. அதன்படி உடலுக்கு தீங்கு விளைவிக்காத சைவ உணவை உண்பது ஆரோக்கியத்தின் முதல்படி என்று கருதப்படுகிறது.

தெய்வ நம்பிக்கை அடிப்படையில் சைவம் பின்பற்றுபவர்கள் உணவில் மட்டுமல்லாது அனைத்து செயல்களிலும் மற்ற விலங்குகளின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். அவர்கள் மற்ற உயிர்களின் ரோமத்தில் இருந்து தயாரிக்கப்படும் உடைகள், பொம்மைகள், தோல் பொருட்களை பயன்படுத்துவதையும் தவிர்க்கிறார்கள். இதுவும் நாகரிக மனிதனின் மேம்பட்ட பழக்கங்களில் ஒன்றாகும்.

அமெரிக்காவில் ஒரு கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சைவ உணவு மட்டும் சாப்பிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க மக்கள் தொகையில் 5 சதவீதமாகும். இவர்களில் 75 லட்சம் பேர் சுத்த சைவமாக விலங்கினத்தில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களையும் தவிர்ப்பவர்களாக உள்ளனர்.சைவ உணவு சாப்பிடுபவர்கள் விலங்கு இறைச்சியில் இருந்து கிடைக்கும் நிறைவுற்ற கொழுப்புகள், ஹார்மோன்கள் மற்றும் கொழுப்புகள் போன்றவற்றை பெறுவதில்லை. எனவே அவர்களுக்கு புற்றுநோய், நீரிழிவு, உடல்பருமன், இதய பாதிப்புகள் போன்ற மோசமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கரின் சராசரி கொலஸ்டிரால் அளவு ஒரு டெசிலிட்டருக்கு, 210 மில்லிகிராம் என்ற அளவில் உள்ளது. மருத்துவ அறிக்கையின்படி 150 முதல் 200 மில்லிகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்களின் கொலஸ்டிரால் அளவு 146 மில்லிகிராமாக இருக்கிறது. இது அவர்களுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.

அவரை, சோயா பால், காய்கறி, கீரைகள், கொட்டை வகைகளில் இருந்து மனித உடலுக்குத் தேவையான அளவில் புரதத்தை பெற முடியும். சைவ உணவுக்கு மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் பால் குடிப்பதில்லை. புரோகோலி, சீன முட்டைகோஸ், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட பல காய்கனிகளை உட்கொண்டு பாலுக்கு இணையான கால்சியம் சத்துப்பொருளை ஈடுகட்டிக்கொள்கிறார்கள்.

‘வைட்டமின்-டி’ கால்சியத்தை கிரகிப்பதற்கு அவசியமாகும். இது கால்சியத்தை சிதைத்து உடலுக்கு வழங்குகிறது. அப்படி சிதைத்தால்தான் எலும்புகள் மற்றும் பற் களால் கால்சியத்தை கிரகிக்க முடியும். காய்கறி உணவுகள் அதிகமாக உண்ணும்போது அவை சூரிய ஒளியில் வளர்ந்து பெற்ற வைட்டமின்-டி உடலுக்கு கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது.சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு, அசைவ உணவு சாப்பிடுபவர்களைவிட குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்களில் 34 சதவீத அளவுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

நோபல் பரிசு வென்ற எலிசபெத் பிளாக்பர்ன் என்பவர் சைவ உணவு கட்டுப்பாட்டு முறையை கடைப்பிடித்தவர் களிடம் 3 மாதத்தில் 500 மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டதை கண்டுபிடித்துள்ளார். பல்வேறு ஜீன்கள் செயல்படாமல் இருப்பதே புற்றுநோய், இதய நோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கு காரணம் என்றும், சைவ உணவுகள் ஏராளமான ஜீன்களை உயிர்பெறச் செய்வதால் இந்த நோய் களுக்கு எதிர்ப்புத் தன்மை உடலில் ஏற்படுவதாகவும் அவர் கூறி உள்ளார்.

இளமைக் காலத்தில் ருசிக்காகவும், அறியாமையாலும் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுபவர்கள், உடல் நலக்குறைபாடு ஏற்பட்ட பின்பு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு விஷயத்தில் தீவிர கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் “வரும்முன் காப்பவனே புத்திசாலி” எனும் பொன் மொழிக்கேற்ப ஆரோக்கியமான உணவு முறையையும், நல்ல பழக்க வழக்கங்களையும் சிறுவயதில் இருந்தே பின்பற்றுபவர்களே சமர்த்துப் பிள்ளைகள். நீங்கள் ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்தி நலமுடன் வாழ்வீர்கள்தானே?!Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker