முதுமை: பெண்கள் மன அழுத்தத்தை போக்கி மகிழ்ச்சி அடைவது எப்படி?
முதுமையில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். முதுமையை பக்குவமாக எதிர்கொண்டால், மனஅழுத்தமின்றி பெண்களால் நிம்மதியாக வாழமுடியும். முதுமை மன அழுத்தத்திற்குரியதல்ல, மனமகிழ்ச்சிக்குரியது என்பதை புரிந்துகொண்டு பெண்கள் தன்னம்பிக்கையோடு வலம்வரவேண்டும்.
இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுளைவிடபெண்களின் ஆயுள் காலம் அதிகமாக இருக்கிறது. அதனால் கணவரை இழந்து முதுமையை தனிமையில் கழிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சமூக நெருக்கடிகளும், குடும்ப சூழல்களும், தனிமையின் தவிப்பும், ஆரோக்கிய சிக்கல்களும் பெண்களுக்கு மனஅழுத்தத்தை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன.
முதிய பெண்களில் 25 சதவீதம் பேர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதாவது நான்கு பெண்களில் ஒருவர் இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆண்களைவிட, பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது இருமடங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்களுக்கு மேலாக மனநெருக்கடி இருந்து கொண்டிருந்தால் அதை கவனிக்க வேண்டும். முன்பு எதிலெல்லாம் ஆர்வம் இருந்ததோ அதிலெல்லாம் ஆர்வம் குறைந்து கொண்டிருந்தாலும் அதுவும் கவனிக்கத்தகுந்ததாகும். அதிக சோர்வும் கவனத்திற்குரியதுதான். உறக்கமின்மை, பசியின்மை போன்றவைகளும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
கணவர் இறந்துபோயிருப்பது, பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பது, பொருளாதார தேவைகளை ஈடுகட்டமுடியாமல் தவிப்பது, குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புறக்கணிப்பது போன்றவைகள் எல்லாம் முதிய பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
பிரியமானவர்களின் மரணம், நோய்களின் தாக்குதல், குறிப்பிட்டவிதத்திலான கட்டுப்படுத்தமுடியாத வலிகள், தன்னுடைய ஆரோக்கிய நிலை மிகவும் மோசமாகி விட்டது என்ற எண்ணம், சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வு போன்றவை பெரும்பாலான முதியோர்களுக்கு ஏற்படுகிறது. குடும்பத்தில் வசிக்கும் முதியபெண்கள் மரு மகள்களோடு பொருந்திப்போக முடியாத நிலையும் தோன்றுகிறது. சிலருக்கு பேரன், பேத்திகளோடு இணக்கம் இல்லாத நிலை ஏற்படுகிறது. சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.
முதிய பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை பெரும்பாலும் சரியான நேரத்தில் பகுத்து அறிந்து கொள்ள முடிவதில்லை. நீங்கள் முதியவர்களாக இருந்தால் கீழ்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று பாருங்கள்.
எப்போதும் பதற்றமாக இருப்பது.
காரணமே இல்லாமல் பயம் கொள்வது.
இனம்புரியாத கவலையில் சிக்கி இருப்பது.
சோகத்தையும், துக்கத்தையும் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருப்பது.
தனியாக வெளி இடங்களுக்குச் செல்லத் தயங்குவது.
வேலையில் ஆர்வமில்லாமை.
செய்யும் செயல்களில் பிடிப்பு இல்லாமல் இருப்பது.
இதய துடிப்பு அதிகரிப்பது.
வயிற்றில் அடிக்கடி ஏதாவது ஒருவிதத்தில் அவஸ்தை ஏற்படுவது.
அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பது.
‘தான் உயிர் வாழ்வதால் என்ன பலன்?’ என்ற கேள்வி அடிக்கடி எழுவது.
எதை செய்தாலும் திருப்தி இல்லை என்று கருதுவது.
வீட்டை விட்டு வெளியேறி எங்கேயாவது செல்ல முயற்சிப்பது.
எப்போதும் எதிர்மறையாக சிந்திப்பது.
அளவுக்கு அதிகமாக கோபம் கொள்வது.
குற்ற உணர்ச்சியில் தவிப்பது.
தற்கொலை சிந்தனை தோன்றுவது.
போன்றவை இருந்தால் கவனம் கொள்ளுங்கள்.
பெரும்பாலான குடும்பங்களில் முதியோர்கள் இருக்கிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் முதியோர்கள் மீது தனிக்கவனம் செலுத்தவேண்டும். அன்பும், அக்கறையும் அவர்கள் மீதுகாட்டவேண்டும். ‘நாங்கள் இருக்கிறோம்… கவலைப்படாதீர்கள்’ என்று எப்போதும் ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கவேண்டும். அவர்களது உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பிடித்தமானவைகளை செய்யவும் அனுமதிக்கவேண்டும். அவர்களை ஒரே இடத்தில் முடக்கிப்போடாமல் இயங்கச் செய்வதும் அவசியம்.
மனஅழுத்தம் இருப்பதாக கருதும் எல்லாபெண்களுமே மூன்று விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
மனதிற்கு முழுமை தரும் தியானம்: இதில் பலவகை சுவாசப் பயிற்சிகளும், உடற்பயிற்சிகளும் அடங்கும். மனதை ஒரு நிலைப் படுத்த இது உதவும். இது அனைவருக்கும் ஏற்றது. இதன் மூலம் உடல்- மன உற்சாகத்தை மேம்படுத்தலாம்.
மியூசிக்தெரபி: இசை மனதை இயல்பாக்கும். மனதுக்கு புத் துணர்ச்சி தந்து கவலைகளை போக்கடிக்கும். வாழ்க்கையில் பிடித்தத்தை தோற்றுவிக்கும். உடலை ஆரோக்கியமாக்கி இயங்கவைக்கும். எல்லோருடனும் இசைந்து போகவும் செய்யும். மனதை இயல்பாக்கி உறவுகளை சீராக்கும்.
தசைகளை தளர்த்துவது (Muscular Relaxation): தசைகளை தளர்த்தி உடல் இறுக்கத்தை குறைப்பதன் மூலம் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கச்செய்யும் வழிமுறை இது. இதற்கும் கட்டமைக்கப்பட்ட முறையான பயிற்சி முறைகள் உள்ளன.
மனதிற்கு உற்சாகம் தரும் செயல்கள்: ஒவ்வொருவருக்கும் அவரவர் மனதிற்குபிடித்த செயல்கள் சில இருக்கும். பிடித்த பாடல்கள் கேட்பது, ஓவியம் வரைவது, சுற்றுலாசெல்வது, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற பல விஷயங்கள் பிடித்தமானதாக இருக்கும். அவைகளை விரும்பும் போதெல்லாம் செய்துவரவேண்டும். தன்னைப்போன்ற சிந்தனை கொண்டவர்களை ஒரு குழுவாக இணைத்து அவர் களோடு நட்பு பாராட்டவேண்டும். இயற்கை காட்சிகளை ரசிப்பது, கடற்கரை பகுதிகளில் காற்றோட்டமாக நடப்பது, பிடித்தமான புத்தகங்களை வாசிப்பது போன்றவைகளும் முதுமையில் மனதுக்கு அமைதியை தரும்.
மனிதவாழ்க்கை என்பது பலவித பருவங்களை உள்ளடக்கியது. குழந்தைப்பருவத்தில் இருந்து ஒவ்வொரு பருவமாக வாழ்க்கையில் கடந்து வருகிறோம். அதில் எல்லா பருவத்திலும் சுயமாக முடிவெடுக்கவும், சுயமாக இயங்கவும் முடியும். அதற்கு மனதும், உடலும் ஒத்துழைக்கும். முதுமையில் மட்டுமே தடுமாறும் நிலையும், முடிவெடுக்கத் தயங்கும் நிலையும் ஏற்படும். இது இயற்கையானது. எல்லோருக்கும் பொதுவானது. இந்த நிலையை உணர்ந்து முதியோர்களை மதித்து மரியாதை செய்து அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைப்பது இறை தொண்டை விட சிறப்பானது.