தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு கொடுக்காதீர்கள்

தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.



‘சர்க்கரை சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட உணவுகளில் கூட தேன் அல்லது பழச்சாறு மூலமாக சர்க்கரை உடலுக்குள் செல்கிறது. குழந்தைகள் குறைந்தளவு சர்க்கரை உண்பதை உறுதிசெய்யும் பெற்றோர், அதேநேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று ராயல் காலேஜ் ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பரிந்துரை செய்கிறது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பற்சிதைவு, மோசமான உடல்நிலை மற்றும் உடற்பருமனிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும். அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட அதிகளவு சர்க்கரை கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரை கொண்ட பானங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக பழங்கள், பால் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பால் பொருட்களையும் கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகளவிலான சர்க்கரை அல்லது இனிப்பு சுவை செயற்கையாக சேர்க்கப்படுவதாக கூறுகிறார் இந்த ஆராய்ச்சிக்குழுவை சேர்ந்த பேராசிரியர் மேரி பியூட்ர்ல்.

“பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் அதிகளவு இனிப்பு பொருட்களுடன், தேவைக்கு அதிகமான ஆற்றலை கொடுக்கும் மூலப் பொருட்களும் சேர்க்கப்படுகிறது. பழங்களில் பெறப்படும் சர்க்கரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதாவது, இயற்கை மற்றும் செயற்கை என அனைத்து விதமான மூலங்களில் இருந்தும் பெறப்படும் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்” என்று அவர் கூறுகிறார்.



இயற்கையாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆனால், அதை தூண்டக்கூடிய வகையில் பெற்றோர்கள் செயல்படக் கூடாது.
“தக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் வேறுபட்ட சுவைகளை முயற்சி செய்வதற்கு குழந்தைகள் தயாராகவே இருக்கிறார்கள். புரோக்கலி, கீரை வகைகள் உள்ளிட்டவற்றையும், கசப்பு நிறைந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும்” என்று பேராசிரியர் பியூட்ர்ல் மேலும் கூறுகிறார்.

அளவுக்கு அதிகமான சர்க்கரை உடலில் ஏற்படுத்த கூடிய விளைவுகள் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறும் அவர், “ஐந்து வயதிற்குட்பட்ட 25 சதவீதத்துக்கும் மேலான குழந்தைகளை பாதிக்கும் பற்சிதைவுக்கு சர்க்கரையே காரணம். அதுமட்டுமின்றி, சிறுவயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கிறது” என்று அவர் மேலும் எச்சரிக்கிறார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker