எடிட்டர் சாய்ஸ்

பெண்கள் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவது எப்படி?

ஆறு வயது வரை உள்ள குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில், குறைவான உடல் எடையோடு பிறக்கும் குழந்தைகள், உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும். ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க முடியும்.கர்ப்பிணிகள் சமச்சீர் உணவினை உண்ண வேண்டும். ஒவ்வொரு மாதமும் டாக்டர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து தேவையான மருத்துவ பரிசோதனைகளையும், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் மாத்திரைகளைத் தேவையான அளவு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரம் மற்றும் தூய்மையான பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டு அவற்றை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

அதேபோல் பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கத் தொடங்கிவிட வேண்டும். இது குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியினை தருகிறது. அத்துடன் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. முக்கியமாக மாதவிடாய் நின்ற காலத்தில் இடுப்பு எலும்புமுறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.

குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின் பழச்சாறு, இட்லி, சோறு, வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவு வகையை சிறிதுசிறிதாக உண்ண கொடுக்க வேண்டும். குறித்த நேரத்தில் தடுப்பு ஊசிகளை போட வேண்டும்.

குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா? என்று கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ஓ.ஆர்.எஸ். கரைசலை மருத்துவரின் ஆலோசனைப்படி அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பதின்ம வயது பெண்கள் வைட்டமின் மற்றும் கனிமம் நிறைந்த பலவகையான சமச்சீரான உணவினை உண்ண வேண்டும். இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தை மட்டும் பேணுவது ஆரோக்கியம் அன்று. உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும். உடற்பயிற்சி அவசியம் செய்து சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

குடும்பத்தினர் அனைவரும், சுத்தமான நீரையே பருக வேண்டும். பெண் குழந்தை என்று பாரபட்சம் காட்டாமல் ஆணுக்கு நிகராக நல்ல உணவு, சிறந்த கல்வி, தைரியம், தன்னம்பிக்கை அளித்து பெண்ணை வளர்க்க வேண்டும். மன உளைச்சலை சமாளிக்கவும், நிர்வகிக்கவும் கற்றுத்தர வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்கி, சர்வதேச அரங்கில் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும்!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker