பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்…
தீபாவளி பண்டிகை என்பது பட்டாசுகள் வாணவேடிக்கைகளுடன் குதுகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
செய்ய வேண்டியவை
* பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எப்பொழுதுமே திறந்தவெளியைத் தேர்ந்தெடுத்து அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிக்க தொடங்க வேண்டும்.
* பட்டாசுகளை பட்டாசு விற்க உரிமம் பெற்றவர்கள் மற்றும் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து வாங்க வேண்டும்.
* மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து ஒதுங்கி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது. அதே போல் பட்டாசுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்தே வெடிக்க வேண்டும்.
* பட்டாசுகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை படித்து பின்பு அதன்படி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.
* ராக்கெட் போன்ற வானவேடிக்கை பட்டாசுகளை பற்றவைப்பதற்கு முன் திறந்த ஜன்னல், கதவுகள், பால்கனி போன்றவற்றை நோக்கி இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிப்பது நல்லது. இதன் மூலம் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
* நம்முடைய மொத்த பட்டாசுகளை வெடிக்கும் பொழுது கால்களில் காலணிகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
* தண்ணீர் நிறைந்த வாளியை பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க வேண்டும். இதனால் தீ விபத்துகள் ஏற்பட்டாலும் அவற்றை எளிதில் அனைத்து விட முடியும்.
* ஒரு நேரத்தில் ஒரு வெடியை மட்டுமே வெடிக்க வேண்டும். ஒருவர் பட்டாசை வெடிக்கும் பொழுது மற்றவர்கள் அதை பார்ப்பது (பாதுகாப்பான தூரத்திலிருந்து) பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
* நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதி, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீபாவளிக்கு முன் பட்டாசுகளை எவ்வாறு கையாள்வது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
செய்யக்கூடாதவை
* பட்டாசுகளை வெடிக்கும் பொழுது ஜெர்ஸி, நைலான், சில்க் போன்ற துணிகளை அணியாமல் பருத்தி துணிகளை அணிய வேண்டும்.
* பட்டாசுகளை வெடிக்க தீக்குச்சிகள், சிறிய ஊதுபத்திகளை பயன்படுத்தக் கூடாது.
* மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்கு கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது.
* இரண்டு, மூன்று வெடிகளை இணைத்து வெடிக்க கூடாது.
* உபயோகப்படுத்தப்படாத பட்டாசுகளின் அருகில் எரியும் விளக்கு, ஊதுபத்தி போன்றவற்றை வைக்க கூடாது.
* வெடிக்காமல் பாதியில் நின்று போன வெடிகளுக்கு அருகில் சென்று அவற்றை வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
* தெருக்கள் மற்றும் சாலைகளில் மக்கள் நடந்து செல்லும் பொழுதோ அல்லது வாகனங்களில் செல்லும் பொழுதோ வெடிகளை வெடிக்க கூடாது.
* அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பது போன்ற வேடிக்கை விளையாட்டில் ஈடுபடக் கூடாது.
* குழந்தைகளின் கைகளில் பட்டாசுகளை கொடுத்து ஏற்றக்கூடாது.
* வீட்டிற்குள்ளே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
* நாம் பற்றவைத்த பட்டாசுகளை வெடிக்கவில்லை என்றால் அவற்றை கைகளில் தூக்கிப் பார்ப்பது அல்லது கால்களால் தள்ளுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது.
* அதே போல் சிறிய பாட்டில்கள் பாத்திரங்கள், பெட்டிகளின் உள்ளே வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது.
* வெடிக்கும் பொழுது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது கிரீம், களிம்பு அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்க கூடாது.
* தொளதொளப்பாக இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
* ஆஸ்துமா, அழற்சி மற்றும் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் தீபாவளி சமயங்களில் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டும்.
* தீபாவளி பண்டிகை என்பது மிகவும் குதுகலமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இத்தீபாவளி திருநாளை பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது நம் கைகளில்தான் உள்ளது.
அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுவதற்கு வாழ்த்துக்கள்.