பிறந்த குழந்தைக்கு ஆரம்ப நாட்களில் ஏற்படும் பிரச்சினைகளும் காரணங்களும்
பிறந்த முதல் வாரத்தில், குழந்தையின் உடல் எடை பத்து சதவிகிதம்வரை குறையும். அடுத்த பத்தே நாள்களில் மீண்டும் எடை அதிகரித்துவிடும். பிறகு ஒவ்வொரு நாளும் 20 முதல் 40 கிராம்கள் என்கிற விகிதத்தில் எடை அதிகரித்துக்கொண்டே போகும். இது இயல்பானது.
குழந்தை அழுவதுகூட அழகு. பசியெடுத்தால் குழந்தை அழத்தான் செய்யும். திட உணவுகளைப் சாப்பிடப் பழக்குவதற்கு முன்னதாக, பிறந்து சில மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் மட்டும்தான் குழந்தைக்கு உணவு. வயிறு நிறைய தாய்ப்பால் கொடுத்தாலும், சில மணி நேரங்களிலேயே அது செரிமானமாகி சிறுநீராக வெளியேறிவிடும். இதுவும் இயல்பானதுதான். பால் கொடுத்த பிறகும் அழுதால், எதற்காக அழுகிறது என்று கவனிக்கவேண்டியது அவசியம். எறும்பு, பூச்சிகள் ஏதாவது கடித்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தைகளை வெள்ளை நிற விரிப்புகளில் படுக்கவைத்தால், பூச்சியோ, எறும்போ ஊர்ந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
பால் கொடுத்ததும், குழந்தையை தோளில் போட்டு, முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும். தட்டும்போதோ, படுக்கவைக்கும்போதோ கொஞ்சம் பாலை கக்கக்கூடும். அதற்காக என்னவோ, ஏதோவென்று பயந்துவிடக் கூடாது. குழந்தை பாலைக் கக்குவதும் இயல்பானதே. அதிகமாகப் பாலைக் குடிக்கும் குழந்தைகள் பாலைக் கக்கிவிடுவதுண்டு. அதேபோல, குழந்தை பால் குடித்ததுமே அதைப் படுக்கவைக்கக் கூடாது. குழந்தைகள், ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை சிறுநீர் கழித்தால், அவர்களுக்குத் தேவையான அளவுக்குப் பால் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
தினமும் வெதுவெதுப்பான நீரால் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். கண், மூக்கு, காதுகளில் எதையும் ஊற்றக் கூடாது. பருவநிலை சரியாக இருந்தால் வாரம் இருமுறை தலைக்குக் குளிக்கவைக்கலாம். குளிப்பாட்டியவுடன் பருத்தித் துணியால் நன்றாகத் துடைத்துவிட்டு, உலர் ஆடைகளைப் போட்டுவிட வேண்டும். பௌடர் போடக் கூடாது. தொப்புள் கொடி விழுந்தவுடன், தொப்புளை நன்றாகத் துடைத்து, சுத்தப்படுத்திவிட்டு, போவிடோன் (Povidone) என்ற மருந்தைத் தடவினால் நோய்த்தொற்றுகள் ஏற்படாது.
பிறந்த முதல் சில நாள்களில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் மலம் கழிக்கும். இது இயல்பானது. ஆனால், குழந்தை சிரமப்பட்டு, கட்டியாக மலம் கழித்தால் அது, மலச்சிக்கல் பிரச்னையைக் குறிக்கும். இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில குழந்தைகள் பால் குடித்தவுடனேயே சிறிது மலம் கழிக்கும், இதை மருத்துவத்துறையில் `காஸ்ட்ரோகோலிக் ரிஃப்லெக்ஸ்’ (Gastrocolic reflex) என்பார்கள். பசியில் பால் கொடுக்கும்போது, அதிகமாகக் குடிக்க வேண்டும் என்பதற்காக பெருங்குடலில் இருக்கும் மலத்தை உடலே வெளியே தள்ளும். இதற்காகவும் பயப்படத் தேவையில்லை. குழந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை சிறுநீர் கழித்து, அதன் உடல் எடையும் சராசரியாக அதிகரித்து வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லையென்று புரிந்துகொள்ளலாம்.
குழந்தையின் தோலில் தோன்றும் சிவப்பு நிறக் கொப்பளங்களை மருத்துவ மொழியில் `எரிதிமா டாக்ஸிகம்’ (Erythema toxicum) என்பார்கள். இந்தப் பிரச்னை சில நாள்களில் தானாகவே சரியாகிவிடும், இதற்கென எந்தச் சிகிச்சையும் செய்யவேண்டியதில்லை. அதேபோல, குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் மேல் தோல் உரிவதும் இயல்பானதே. தேங்காய் எண்ணெய் தேய்த்துவந்தாலே, தோல் உரிவது குறைந்துவிடும்.
குழந்தைக்கு டயாப்பர் பயன்படுத்தும் இடத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படலாம். சிறுநீர், மலத்தின் ஈரப்பதம் காரணமாக தோல் மென்மையாவதால் இப்படி ஏற்படும். அந்த இடத்தில் தேய்க்கவோ, சொறியவோ கூடாது; மென்மையாகச் சுத்தப்படுத்தி, உலர்வாக வைத்திருந்தாலே போதும், விரைவில் இந்தத் தடிப்புகள் நீங்கிவிடும். பிளாஸ்டிக் டயாப்பர்களுக்குப் பதிலாக பருத்தியால் தயாரிக்கப்பட்டதைப் பயன்படுத்தினால் இந்தப் பிரச்னை ஏற்படாது.