திருமணம் ஆகாத இளம்வயதினர் மகிழ்ச்சியாக உள்ளனர்
பெங்களூருவில் உள்ள நிலையான வளர்ச்சிக்கான மையம் (சி.எஸ்.டி.) சார்பில் கடந்த 2018-ம் ஆண்டில் 8 மாதங்களாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது பெங்களூரு நகரில் எந்த வயதில் உடையவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பொருளாதார காரணிகள் எந்தளவுக்கு மகிழ்ச்சியை நிர்ணயிக்கின்றன என்பன போன்றவற்றை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுச்சூழல், சமூக உள்கட்டமைப்பு, பொருளாதார காரணிகள் உள்பட சில அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப் பட்டது. 1,800 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி பெங்களூரு நகரில் திருமணம் ஆன முதிய தம்பதிகளை ஒப்பிடுகையில் திருமணம் ஆகாத இளம்வயதினர் தான் அதிகளவில் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது திருமணம் ஆகாத இளம்வயதினரில் 61.6 சதவீதம் பேர் மகிழ்ச்சியாகவும், திருமணம் ஆன முதிய தம்பதிகள் 58.2 சதவீதம் அளவுக்கு மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் வயது அதிகரிக்க அதிகரிக்க மகிழ்ச்சி குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது. அத்துடன் வயது அடிப்படையில் பார்க்கும்போது 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 63 சதவீத பேரும், 60 வயதுக்கு அதிகமானவர்களில் 56.5 சதவீதம் பேரும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர். மேலும் மகிழ்ச்சியாக உள்ளவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 26 சதவீதம் பேர் மிகவும் மகிழ்ச்சியாகவும், 74 சதவீதம் பேர் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வருமானத்தை பொறுத்த மகிழ்ச்சியில் உயர் வருமானம், நடுத்தர வருமானம் பெறுபவர்களை காட்டிலும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மகிழ்ச்சி குறைந்து காணப்படுகிறார்கள். இந்த வகையில் குறைந்த வருமானம் பெறுபவர்கள் 54.5 சதவீதம் பேரும், நடுத்தர வருமானம் பெறுபவர்கள் 58.6 சதவீதம் பேரும், உயர் வருமானம் பெறுபவர்கள் 58.5 சதவீதம் பேரும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு 8 சதவீதமும், நடுத்தர வர்க்கத்தினருக்கு 8.3 சதவீதமும், உயர் வருமானம் கொண்டவர்களுக்கு 8.4 சதவீதம் என்ற அளவிலும் பொருளாதார காரணிகள் மகிழ்ச்சியை நிர்ணயிக்கும் வகையில் உள்ளது.