உற்சாகம் தரும் பார்ட்னருடன் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சி
ஃபிட்டாக மாற விரும்புகிறவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அத்தகைய உடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும் பலன் இன்னும் அதிகம். இதையே Partner Exercise என்கிறார்கள்.
வாக்கிங் செல்வதோ, ஜிம்முக்கு வெயிட் டிரெயினிங் செல்வதோ எதுவாக இருந்தாலும் யாரேனும் ஒரு துணையுடன் இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும். யோகா கிளாஸ், இரண்டு பேர் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதுடன் இருவருக்கும் இடையில் உள்ள அன்பையும் வளர்க்கும்.
இருவரில் ஒருவர் மட்டும் வாக்கிங் போவது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது தடைபடும். சில நேரங்களில் சோம்பல்பட்டு பயிற்சியை தள்ளி வைப்போம் அல்லது விட்டுவிடுவோம். அதுவே பார்ட்னரோடு தொடர்ச்சியாக வாக்கிங் செல்லும்போது நாம் தள்ளி வைப்பதாக இருந்தாலும் அவர் கேட்டுக் கொள்வதாலோ அல்லது வற்புறுத்துவதாலோ நம் பயிற்சி தடைபடாது.
சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதால் ஒருவருக்கொருவர் தூண்டு சக்தியாக செயலாற்ற முடியும். மகிழ்ச்சி இரட்டிப்பாகி, இருவருக்குள்ளும் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில், இருவரது மனம், உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள உதவும். உடற்பயிற்சிகளையோ, யோகா பயிற்சிகளையோ பார்ட்னரோடு செய்தால் ஒருவர் தவறு செய்தால்கூட மற்றவர் சரி செய்துவிடுவார். சில நேரங்களில் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படலாம். பார்ட்னரோடு செய்யும்போது, ஒருவருக்கொருவர் பேலன்ஸ் செய்து பயிற்சிகளை மேற்கொள்வதால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
அலுவலகத்தில் கடினமான வேலைப்பளு இருக்கும் நாட்களில், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க முயற்சிப்போம். அந்த நேரத்தில் பார்ட்னர் ‘நீ என்னோடு வந்தால் போதும். ஒர்க் அவுட் பண்ண வேண்டாம்’ என்று சொல்லி அழைத்துச் சென்று விடுவார். அங்கு போனதும் நாமாகவே அவரோடு பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவோம். எனவே, இதற்கு சரியான பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவசியம். ஆரோக்கியம், உடற்பயிற்சி, உணவுமுறை பற்றிய அக்கறை கொண்டவராக, அவைகளைப் பற்றித் தெரிந்தவராக இருப்பது நல்லது. இருவராக ஃபிட்னஸ் பயிற்சிகளைச் செய்யும்போது இலக்குகளை எளிதில் அடையலாம்.