வாழ்வை வளமாக்கும் வழிகள்…
தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டும், தங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் தாங்களே பேசிக்கொண்டும் வாழ்வைக் கழிப்பது சிலருக்குப் பிடித்தமான விஷயங்கள். அப்படி நடந்து கொள்வதையே ‘தன்னடக்கம்’ ‘தாழ்மை’ ‘பணிவு’ என்றெல்லாம் அவர்கள் தவறாகக் கருதிக் கொள்கிறார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு வேறு யாரும் தேவை இல்லை; தங்களைத் தாங்களே அவர்கள் வீழ்த்திக் கொள்வார்கள்.
தன்னடக்கம் என்பது வேறு; தாழ்வு மனப்பான்மை என்பது வேறு. தன்னடக்கம் தலைகுனியாது; தாழ்ச்சி அடையாது. அது நிமிர்ந்து நிற்கும். உண்மையை உரக்கச் சொல்லும். ஆனால் தாழ்வு மனப்பான்மை, உங்கள் வாழ்வை தரைமட்டமாக்கிவிடும்.
குட்டக் குட்டக் குனிந்தால், உங்கள் முதுகின்மேல் நாலுபேர் ஏறி உட்கார்ந்து கொண்டு குட்டுவார்கள். ‘ஆகா, இதுவல்லவா சுகம்’ என்று நீங்கள் குனிந்தபடியே வாழப் பழகிவிட்டால், அதன்பின் உங்கள் கூன்முதுகை நிமிர்த்த எந்த வைத்தியராலும் முடியாது.
அப்படித் தங்களைக் கெடுத்துக்கொண்டு குட்டிச்சுவராகிப் போனவர்கள் பலருண்டு. நிமிர்ந்து நடப்பதற்கே அஞ்சுவார்கள். யாராவது நம்மைப் பற்றி சொல்லித் தொலைத்துவிட்டால் வம்பாகிவிடுமே என்று பயந்து, கூனிக் குறுகி வளைந்து குழைந்து செல்வார்கள்.
‘தற்பெருமை கொள்ளாதே; அடங்கி இருக்கக் கற்றுக்கொள்’ என்று உங்களைப் பார்த்துச் சொல்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை வளரவிட மாட்டார்கள். ‘அடங்கு அடங்கு’ என்று சொல்லியே அடக்கம் செய்துவிடுவார்கள்.
எனவே சுயமாகச் சிந்தியுங்கள். சுதந்திரமாக வாழுங்கள். உங்களை முதலில் நீங்கள் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை எண்ணிப் பெருமை கொள்ளுங்கள். தன்பெருமை என்பதுதானே தற்பெருமை. ஒருவன் தன் பெருமைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வது தற்பெருமையாயின் அதில் என்ன தவறு!
உலக வரலாற்றில் புகழ்மிக்க நாயகர்களில் ஒருவர் ஜூலியஸ் சீசர். பல நாடுகளின் சட்டதிட்டங்களையும் கலைகளையும் தெரிந்துவர, அவர் கப்பல் பயணத்தை மேற்கொண்ட போது, கடல் கொள்ளையர்களிடம் அவர் சென்ற கப்பல் மாட்டிக் கொண்டது.
பயணிகளை விடுதலை செய்ய நிபந்தனை விதித்து, கொள்ளையர்கள் அந்த நாட்டிற்குத் தகவல் அனுப்பினர். ஒவ்வொருவரையும் விடுதலை செய்ய தலா 20 தங்கக் காசு கொடுக்க வேண்டும் என்று கோரினர். இதைக்கேட்ட சீசருக்குக் கடுங்கோபம்.
என்னை அவமானப்படுத்தாதீர்கள். என் மதிப்பு வெறும் 20 தங்கக்காசுகள் தானா? நீங்கள் அதிகம் கேளுங்கள். குறைந்தபட்சம் 50 தங்கக் காசுகளாவது கொடுக்கச் சொல்லுங்கள். அதுதான் எனக்கு கவுரவம் என்று கூறினார். அவரைப் பார்த்து, ‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காக பிறர் சொல்ல மாட்டார்கள். உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்னாராம்.
அத்தகைய துணிச்சலும் தன்னம்பிக்கையும் நமக்கு வேண்டும். நம்முடைய தனித்துவத்தை பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்த முனையும்போதுதான், அதை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் நாம் பெற முடியும். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கை. கோபுரம் என்றால் கோபுரம்; குடிசை என்றால் குடிசை.
நன்றாக வாழ்வதற்காகத்தான் இந்த வாழ்க்கையை நாம் பெற்றிருக்கிறோம். அதைச் சிந்தித்தால் நம்மை நாம் அறிந்து கொள்வோம். நம்மை நாம் அறிந்து கொண்டால் நம் உள்ளாற்றலைப் புரிந்து கொள்வோம். அப்படிப் புரிந்து கொண்டால், நம்மைப் பற்றி நிச்சயமாக நாம் பெருமிதம் கொள்வோம். உலகில் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள்? தங்கள் உள்ளாற்றலை அவர்கள் உணர்ந்தார்கள்; இந்த உலகிற்கு உணர்த்தினார்கள். தாங்கள் தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதில் பெருமிதம் கொண்டார்கள். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் தங்கள் வழியில் சென்றார்கள்; வெற்றி கண்டார்கள். அவர்களே வெளிச்சமானார்கள்.
எனவே நல்லவற்றில் தற்பெருமை கொள்ளுங்கள். அதில் தவறில்லை. இருப்பவற்றை எண்ணிப் புளகாங்கிதம் கொள்வதில் என்ன குற்றம்! அது ஆரோக்கியமானதுதான். ஒருவன் தற்சிறுமை கொள்வதுதான் பெருந்தவறு. ஏனெனில், அதுதான் அவனை அழிக்கக்கூடிய அபாயகரமான நோய்.
தன்னை எள்ளளவேனும் அறிந்து கொள்ளாமல், தன் சக்தியை உணராமல், எப்படியோ வாழ்ந்து முடிப்போம் என்று கோழைத்தனமாக உறங்கிக் கொண்டிருந்தால் ஈக்களும் எறும்புகளும் கூட உங்கள் உடம்பில் மைதானம் அமைத்து விளையாடும். அப்படித்தான் தங்களைப் பற்றிய தெளிவே இல்லாமல் பலரின் வாழ்க்கை பாழ்பட்டுப் போகிறது.
ராமகிருஷ்ணர் உடல்நலமின்றிப் படுத்திருந்தார். தாமாக எழுவதோ உட்காருவதோ எதுவுமே முடியாத நிலை. அவரை கவனித்துக்கொள்ள பல இளைஞர்கள் அவருடன் இருந்தனர்.
வீட்டுத் தோட்டத்தின் மூலையில் செழித்திருந்தன பேரீச்சை மரங்கள். அதன் ரசத்தைப் பருகுவதற்காக அந்த இளைஞர்கள் அம்மரத்தடிக்குச் சென்றார்கள். படுக்கையில் இருந்த ராமகிருஷ்ணர் ஜன்னல் வழியாக அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அப்படி பார்த்து கொண்டிருந்தவர் சட்டென்று எழுந்தார்; வேகமாக ஓடினார்.
கணவர் எழுந்து ஓடுவதைப் பார்த்த சாரதாமணி வியப்படைந்தார். தாமாக எழுவதற்குக்கூட முடியாத நிலையில் இருப்பவர் எப்படி ஓடிச் செல்ல முடியும்! அவரால் நம்ப முடியவில்லை.
அவருடைய அறையைப் பார்த்தார். அங்கே படுக்கை காலியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தார். ராமகிருஷ்ணர் கட்டிலில் படுத்திருந்தார். எப்படி எழுந்து ஓடினீர்கள்? என்று ஆச்சரியம் தாளாமல் அவரிடம் சாரதாமணி கேட்டார்.
‘பேரீச்சை மரத்தில் நல்லபாம்பு ஒன்று இருந்தது. இளைஞர்கள் அதைக் கவனிக்காமல் அங்கு சென்றதைப் பார்த்தேன். அந்தப் பாம்பை விரட்டி அவர்களைக் காப்பாற்றவே ஓடினேன்’ என்றார் ராமகிருஷ்ணர். தம்மை உணர்ந்து தெளிந்தவர்கள் மகான்கள். அத்தகைய மகான்களாக இல்லையென்றாலும், மனிதர்களாக நாம் வாழ வேண்டும்.
இதுவரை எப்படியோ! இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும். அவமானங்கள், காயங்கள் எல்லாம் மாறிப்போகும். எழுந்திருங்கள்!