தாய்மை-குழந்தை பராமரிப்பு

மாணவர்கள் திறந்தவெளியில் விளையாடுவது உடல் நலத்திற்கு நல்லது

இன்றைய மாணவர்கள் செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடுவதால் எத்தனை பயன்கள் உள்ளது என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்…

மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகிறது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகிறது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர் தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கிறார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகிறார். எனவே அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ளவராகவும் மாறுகிறார்.



விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின் போது ஒவ்வொரு மாணவரும் மற்ற மாணவருடனும் பயிற்சியாளர்களுடனும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொன்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது.

விளையாட்டில் ஈடுபடும் போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக் கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்து கொள்ளல் போன்றவற்றை அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர்கள் தங்களது இலக்குகளை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றனர். விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே விளையாட்டில் உண்டாகும் ஏனையோரை மதிக்கும் பழக்கம் பின்னர் அவரை வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்க செய்கிறது.

விளையாட்டில் ஈடுபடும்போதும் அதற்கான பயிற்சிகளின் போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும் போதும் போது அவர்கள் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும் இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. எனவே மாணவர்கள் திறந்தவெளியில் விளையாடுவது உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker