ஆட்டிசம் எதனால் ஏற்படுகிறது?- சிகிச்சை வகைகள்
ஆட்டிசம் என்பது சாதாரணமான மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு, இது ஒருவருடைய தகவல் தொடர்பு, சமூக ஊடாடல், அறிவாற்றல் மற்றும் அவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கிறது.
ஆட்டிசத்தைப் பலதரப்பட்ட தன்மையைக்கொண்ட ஒரு குறைபாடு என்பார்கள். காரணம் இதன் அறிகுறிகளும் பண்புகளும் குழந்தைகளில் பலவிதமாகக் காணப்படுகின்றன, அவர்களை வெவ்வேறு வகைகளில் பாதிக்கின்றன. சில குழந்தைகளுக்கு இதைச் சமாளிப்பதில் பெரிய சவால்கள் ஏற்படக்கூடும், அவர்களுக்குப் பிறருடைய உதவி தேவைப்படும், ஆனால் வேறு சில குழந்தைகள் தங்களுடைய பெரும்பாலான வேலைகளைச் சுதந்தரமாகச் செய்வார்கள், அபூர்வமாகச் சில சிறிய உதவிகள்மட்டுமே இவர்களுக்குத் தேவைப்படும்.
முன்பு இந்த நிலைகள் ஒவ்வொன்றும் (ஆட்டிஸ்டிக் குறைபாடு, வேறு விதத்தில் குறிப்பிடப்படாத, பரவிய வளர்ச்சிக் குறைபாடு (PDD-NOS) மற்றும் ஆஸ்பெர்கர் குறைபாடு) தனித்தனியே குறிப்பிடப்பட்டுவந்தன, ஆனால் இப்போது இந்த நிலைகள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஆட்டிசம் வகைக் குறைபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆட்டிசம் எதனால் ஏற்படுகிறது?
ஆட்டிசத்துக்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது, பல மரபு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இது நிகழலாம் என தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் காரணிகளுக்கு உதாரணங்களாக, மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு நிலைகளைக் குறிப்பிடலாம். இவை பிறப்புக்கு முன்னால் நிகழலாம், பிறப்பின்போது நிகழலாம், அல்லது பிறந்தபிறகு நிகழலாம். குழந்தைப் பருவத்தில் மைய நரம்பு மண்டலத்துக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு சேதமும் ஆட்டிசத்தை ஏற்படுத்தலாம் என்றும் கண்டறியப்படுள்ளது.
ஆட்டிசத்துக்கான சிகிச்சை வகைகள்
குறிப்பு: இந்தச் சிகிச்சைகள் அல்லது தலையீடுகள் அனைத்தும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சந்திக்கக்கூடிய வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் சிலவற்றைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறுவிதமான சவால்களைச் சந்திக்கிறது என்பதால், பெற்றோரும் நிபுணர்களும் சேர்ந்து விவாதித்து, அந்தக் குழந்தைக்குச் சிறந்த, பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானிக்கிறார்கள், அதனைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள். இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஒரு குழந்தைக்கு நல்ல பலனைத் தரும் ஒரு சிகிச்சை இன்னொரு குழந்தைக்குப் பலன் தராமல் இருக்கலாம், இதற்குக் காரணம் ஆட்டிசம் வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது.
ஆட்டிசம் பிரச்னை கொண்ட ஒரு குழந்தைக்கான முழுமையான சிகிச்சைத் திட்டத்தில் இடம்பெறும் சில சிகிச்சைகள்:
வளர்ச்சி சார்ந்த, தனித்துவமான வித்தியாசங்கள், உறவுகள் அடிப்படையிலான அணுகுமுறை (DIR, இதனை “ஃப்ளோர்டைம்” என்றும் அழைப்பார்கள்): இது உணர்வு மற்றும் உறவு வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது (உணர்வுகள், தன்னைக் கவனித்துக்கொள்ளுவோருடன் உறவுகள்). அத்துடன், தான் பார்ப்பவை, கேட்பவை, முகர்பவற்றை ஒரு குழந்தை எப்படிப் புரிந்துகொள்கிறது, எப்படிக் கையாள்கிறது என்பதிலும் இந்தச் சிகிச்சை கவனம் செலுத்துகிறது.
செயல் சார்ந்த சிகிச்சை: ஒரு குழந்தை தன்னால் இயன்றவரை சுதந்தரமாக இயங்குவதற்குத் தேவையான திறன்களைக் கற்றுத்தரும் சிகிச்சை இது. உதாரணமாக, தானே உடுத்திக்கொள்ளுதல், சாப்பிடுதல், குளித்தல் மற்றும் பிறருடன் பேசுதல் போன்ற திறன்கள் இதில் சொல்லித்தரப்படும்.
புலன் ஒருங்கிணைப்பு சிகிச்சை: காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்கள் போன்ற புலன் சார்ந்த விவரங்களைக் குழந்தைகள் முறையாகக் கையாள்வதற்கு இந்தச் சிகிச்சை உதவுகிறது. சில குழந்தைகள் ஒரு சில ஒலிகளைக் கேட்டு பயப்படும், அல்லது, பிறர் தன்னைத் தொடுவதற்கு அனுமதிக்காது, அதுபோன்ற குழந்தைகளுக்குப் புலன் ஒருங்கிணைப்புச் சிகிச்சை உதவலாம்.
பேச்சுச் சிகிச்சை: ஒரு குழந்தை தன்னுடைய தகவல் தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்குப் பேச்சுச் சிகிச்சைகள் உதவுகின்றன. இந்தச் சிகிச்சைகளில், சைகை காட்டுதல், பட அட்டைகளைப் பயன்படுத்துதல்போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி ஒரு குழந்தை தன்னுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் பிறருக்குத் தெரிவிப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இசைச் சிகிச்சை: இந்த வகைச் சிகிச்சையில் பாடுதல், இசையமைத்தல் மற்றும் மேடையில் இசைத்தல் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
படங்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு (PECS): தகவல் தொடர்பைக் கற்றுத்தருவதற்குப் படச் சின்னங்களோ அட்டைகளோ பயன்படுத்தப்படுகின்றன.
ஆரம்பத் தலையீடுகள்: ஆட்டிசம்பற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளில், எவ்வளவு சீக்கிரத்தில் குழந்தைக்குச் சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவு பலன் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது இதற்கு ஆரம்பத் தலையீடு பயன்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டவுடனேயே இந்தத் திட்டத்தைத் தொடங்கிவிடலாம். ஆறு மாதக் குழந்தைக்குக்கூட இதனைப் பயன்படுத்தலாம்.
இந்தத் தலையீட்டுச் சிகிச்சை, ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: சமூகத் திறன்கள், மொழி மற்றும் தகவல் தொடர்பு, போலச்செய்தல், விளையாடும் திறன்கள், தினசரி வாழ்வியல் மற்றும் இயக்கவியல் திறன்கள். இந்தத் திட்டத்தில் பெற்றோர் தொடர்ந்து பங்குபெறுகிறார்கள், தீர்மானம் எடுத்தல், சிகிச்சையை வழங்குதல் என அனைத்திலும் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே ஒரு குழந்தைக்கு ஆட்டிசமோ வேறு வளர்ச்சி சார்ந்த பிரச்னையோ இருக்கலாம் என்று அதன் பெற்றோர் நினைத்தால், அவர்கள் எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவரிடம் பேசுவது முக்கியம்.
பெற்றோருக்கான பயிற்சி: தங்களுடைய குழந்தைக்கு ஆட்டிசம் வந்திருக்கிறது என்று தெரிந்தவுடன், பல பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகிறார்கள், இவர்களுக்கு ஆதரவும் ஆலோசனையும் தேவை. பழக்க வழக்கங்களை மாற்றும் கொள்கைகளையும் திறன்களையும் பற்றிப் பெற்றோருக்குப் பயிற்சி அளித்தால், அவர்கள் தங்களுடைய குழந்தைகளின் சிகிச்சையில் உதவுவார்கள், அவர்களுடன் இணைந்து பணிபுரிவார்கள். அதைவிட முக்கியமாக, குழந்தைக்குத் தாங்கள் கண்டிப்பாக உதவுவோம் என்று பெற்றோர் காட்டும் உறுதி, அந்தக் குழந்தையின் கல்வி, அறிவாற்றல் திறன்கள் மற்றும் சமூக நடத்தைகளைக் கணிசமாக முன்னேற்றக்கூடும்.