ஆரோக்கியம்

தண்ணீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் மண்பானை

பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதை கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக்கூடும். இதனால் பெரும்பாலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்பு இருந்த மிகஎளிய சுத்திகரிப்பு முறை. இன்றைய சூழலில் நோய்களில் இருந்து தப்பிக்க தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டியது மிக அவசியம். வெந்நீரைக் குடித்தாலே செரிமானத் தொந்தரவுகள், உடல் வலி போன்றவை நீங்கிவிடும்.

எப்போதும் குளிர்ச்சியாக தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் மண்பானையில் தண்ணீரை சேமித்து வைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு, நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு. மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும். மண்பானையே இயற்கையின் மிகச்சிறந்த ‘வாட்டர் பில்டர்’. புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.

செம்பு குடத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் தண்ணீரை ஊற்றி வைப்பது மூலமாகத் தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி, நுண்கிருமிகளை அழித்து தண்ணீரை சுத்தப்படுத்தலாம். நீரைக் கொதிக்கவைத்த பின்னர் நெல்லிக்கனிகளையும், சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து, ஊறவைத்துப் பருகலாம். தண்ணீரைக் காய்ச்சும் போதே சீரகத்தை போட்டும் கொதிக்க வைக்கலாம்.

நெல்லி ஊறிய நீர், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண் சத்துகள் நோய் போக்கும் தன்மையை அதிகரிக்கும். தேற்றான் கொட்டைகளை நீரில் போட்டு வைக்கலாம். தேற்றான் கொட்டை ஊறிய நீரால், மாசுகள் அகன்று தூய நீராக மாறும். சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய தண்ணீரிலோ, குடிக்கும் தண்ணீரிலோ தேற்றான் கொட்டையைப் பொடியாக்கிப் போடலாம். தண்ணீரில் இருக்கக்கூடிய நுண் கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைத்துவிடும். கேன்வாட்டரிலும் தேற்றான் கொட்டையை பயன்படுத்தலாம்.

நீர்த்தேக்க தொட்டியிலும்கூட, உடைத்த தேற்றான் கொட்டையை மெல்லிய துணியில் முடிந்துபோடலாம். வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும், நீருக்குச் சுவையும் கூடும். இப்படி இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கின்றன. இயற்கையுடன் இணைந்து வாழ்வோம், ஆரோக்கியமாக…!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker