ஆரோக்கியம்மருத்துவம்

கருமுட்டை உருவாக்கும் வலி

சில பெண்களுக்கு சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறும் சமயத்தில் வயிற்றின் ஒரு புறம் வலி ஏற்படுவது உண்டு. இது மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் ஏற்படுவதால், இதனை மிட்டல்ஸ்மெர்ஸ்(ஜெர்மன் மொழியில் ‘நடு வலி‘ என்று பொருள்) என்றும் அழைப்பர். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் கொண்டது எனில், இந்த வலி 14-வது நாள் ஏற்படும்.

பெண்களில் சுமார் பாதி பேருக்கு, வாழ்வில் ஒருமுறையேனும் கருமுட்டை வெளியிடப்படும்போது தோன்றும் இந்த வலி ஏற்பட்டிருக்கும். சுமார் 20 சதவீதம் பெண்களுக்கு எல்லா மாதங்களும் இந்த வலி இருக்கும். இது மாதவிடாயுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வுதான்.வலிக்கான துல்லியமான காரணம் என்னவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சினைப்பையின் சுவரை துளைத்துக்கொண்டு முட்டை வெளிவரும்போது, சிறிதளவு திரவம் அல்லது சிலசமயம் ரத்தம் வந்து அது அருகிலுள்ள நரம்புகளில் எரிச்சலை ஏற்படுத்துவதன் காரணமாக இந்த வலி உண்டாகக்கூடும் என்று கருதப்படுகிறது. முட்டை உடனே வெளியேறியவுடன் அல்லது உடல் அந்த திரவம் அல்லது ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டவுடன் வலி மறைந்துவிடுகிறது.

இந்த வலி சில நிமிடங்கள் வரை இருக்கலாம் அல்லது ஓரிரு நாள் நீடிக்கலாம். வலியானது, வயிற்றின் வலது மற்றும் இடது சினைப்பைகளில் எது கருமுட்டையை வெளியிடுகிறதோ, அதற்கேற்ப ஏதேனும் ஒரு பக்கத்தில் ஏற்படக்கூடும். ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளுக்கு பிறகு வரும் இரண்டு வாரங்களில், அதாவது மாதவிடாய் சுழற்சியின் மத்தியில் வலி ஏற்பட்டால், அது கருமுட்டை வெளியிடப்படுவதால் ஏற்படும் வலி என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.வழக்கத்தை விட குறைந்த அல்லது நீண்ட மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்கு, மாதவிடாய் தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பு வலி ஏற்படலாம். இந்தப் பிரச்சினையை உறுதிப்படுத்த, மருத்துவர் உங்கள் மாதவிடாய் சுழற்சியை அட்டவணையாக குறிக்குமாறு கேட்டுக்கொள்வார், நீங்கள் எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறது, எந்த இடத்தில் வலி உண்டாகிறது (பொதுவாக அடிவயிற்றில் வலி இருக்கும்) என்பதையெல்லாம் நீங்கள் அதில் குறித்துக்கொண்டே வர வேண்டும்.

உடல் பரிசோதனைகளின்போது உங்களுக்கு கடுமையான வலி இருந்தால் அல்லது பிற பிரச்சினைகள் கண்டறியப்பட்டால், வலிக்கான காரணத்தை தீர்மானிப்பதற்காக எக்ஸ்ரே அல்லது அல்ட்ரா சவுண்ட் சோதனைகள் மற்றும் ரத்தப்பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.கருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலி குறித்து கவலைப்பட வேண்டுமா? இந்த வலி சாதாரணமானது, பெரும்பாலும் இதனால் தீங்கு எதுவும் ஏற்படாது. இருப்பினும், சிலருக்கு அது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக ஏற்படலாம். அந்த வலியும் கருமுட்டை வெளியீட்டினால் ஏற்டும் வலி போலவே தோன்றலாம். எண்டோமெட்ரியோசிஸ், பால்வினை நோய்த்தொற்றுகள், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்திருந்தால் இப்படி வலி ஏற்பட காரணமிருக்கிறது. வலி கடுமையாக இருந்தால் அல்லது தாங்க முடியாத அளவுக்கு இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker