கூந்தல் உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ
முடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். பல அற்புத மூலிகைகள் கூந்தல் வளர்ச்சிக்காக நமது நாட்டில் காலங்காலமாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி சில பயனுள்ள தகவல்கள் உங்களுக்காக.
* மாங்கொட்டையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெய் போல் வரும். இதனுடன் 1 ஸ்பூன் வேப்பம்பூ, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.
* வெட்டிவேர் – 10 கிராம், பட்டை – 100 கிராம், வெந்தயம் – 2 டீஸ்பூன், இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.
* ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம். உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.
* டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில் தயாரித்துக் கொள்ளுங்கள். மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது உடனடியாக நிற்பதுடன், கருகரு எனச் செழித்து வளரும்.
* கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலர வைத்து, பொடித்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக மாறும். நன்றாக வளரும்.