ஆரோக்கியம்

பற்கள் நிறம் மாறுகிறதா?

பற்கள் சிலருக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும். உள்புறத்திலும் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்வழி சுகாதாரத்தில் கவனம் செலுத்தாததே முக்கிய காரணமாகும். ஆப்பிள், உருளைக்கிழங்கு, டீ, காபி, குளிர்பானங்கள் போன்றவையும் பற்களின் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கும். அவற்றை உட்கொண்டபிறகு பற்களை சுத்தமாக்குவது அவசியமானது.

வாய் மற்றும் பற்கள் சார்ந்த நோய் பாதிப்புகளும் பற்களில் கறைகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அது பிறக்கும் குழந்தையின் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்வதும் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். பற்கள் நிறம் மாறுவதை தடுக்க பல் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒழுங்காக பல் துலக்காவிட்டாலோ, பல் இடுக்குகளில் உணவு துகள்கள் தங்கினாலோ அதுவும் பற்களின் நிற மாற்றத்திற்கு காரணமாகிவிடும். பற்சிதைவும் ஏற்படும்.



புளூரைடு அதிகம் கொண்ட நீரை பயன்படுத்துவதும், புளூரைடு அதிகம் கலந்த பற்பசையை கொண்டு பல் துலக்குவதும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பற்களில் புளூரைடு அதிகம் சேரும்போது வெள்ளை நிறத்தில் கறைகள் படியத் தொடங்கும். அதைத்தொடர்ந்து பற்கள் பழுப்பு நிறத்திற்கு மாறும். இறுதியில் பற்சிதைவு ஏற்படும். ஆன்டிபயாடிக் மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்திற்கு உட்கொள்ளும் மாத்திரைகள் போன்றவையும் பற்களில் கறைகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

இரும்பு சத்து கொண்ட டானிக் வகைகள் மற்றும் வாய் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களில் உள்ளடங்கி இருக்கும் குளோரெக்சிடின், செட்டில்பிரிடினியம் குளோரைடுகள் போன்றவையும் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. முதுமையும் பற்களின் நிறமாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாகும். புகை பிடிக்கும் மற்றும் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு பற்களின் நிறம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.



உமிழ்நீர்தான் அனைத்துவகையான நுண்ணுயிர் தொற்றுகளில் இருந்து வாய் சுகாதாரத்தை பேண உதவுகிறது. அதனால் உமிழ்நீர் சுரப்பு சீராக இருக்க வேண்டும். உமிழ்நீர் அளவு குறைவதும் பற்களின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker