‘காபி’யும்.. கர்ப்பமும்..
காபியில் கலந்திருக்கும் காபினை அதிகமாக நுகரும்போது குழந்தையின் கல்லீரல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் குழந்தை வளர்ந்து ஆளாகும்போது இளமை பருவத்தில் கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கர்ப்பிணிகள் தினமும் காபி பருகும்போது மன அழுத்தத்தையும், வளர்ச்சிக்கான ஹார்மோன் அளவில் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆய்வை மேற்கொண்ட சீனாவின் வுஹான் பல்கலைக்கழக இணை ஆசிரியர் இன்க்சியன் கூறுகையில், ‘‘எங்கள் ஆய்வின் முடிவின்படி கர்ப்பிணிகள் அதிக காபின் உட்கொள்ளும்பட்சத்தில் மன அழுத்த ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. அது கருவில் இருக்கும் குழந்தையின் கல்லீரல் வளர்ச்சியை தடுக்கிறது. தாய் மூலம் காபினை நுகர்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லதல்ல. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும் கர்ப்ப காலத்தில் பெண்கள் காபினை சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்.
இந்த ஆய்வுக்கு சினை அடைந்த எலிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றுக்கு குறைந்தபட்சமாக 2-3 கப் காபிக்கு சமமான காபினையும், அதிகபட்சமாக 6-9 கப் காபிக்கு சமமான காபினையும் கொடுத்து பரிசோதித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வு பற்றி டெல்லியை சேர்ந்த கருத்தரிப்பு மைய இயக்குனரான டாக்டர் சுவேதா குப்தா, ‘‘கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். ஒருவித ஏக்கம் தோன்றும். இதுபோன்ற சூழ்நிலையில் மனதை இதமாக்குவதற்காக சிலர் காபியை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இருக்கும் அதிக அளவு காபின் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்’’ என்கிறார்.
புனேவை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஹர்ஷல் ராஜேக்கர், ‘‘கர்ப்பிணி பெண்ணுக்கோ, அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையின் கல்லீரலுக்கோ காபின் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேவேளையில் அதிகபடியான காபினை உட்கொண்டால் தூக்கம் தடைபடும். அது கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’’ என்கிறார்.