பித்ரு தர்ப்பணத்தின் முக்கியத்துவம்
ஆடி அமாவாசையன்று, `பித்ரு’ எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.
காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பித்ரு லோகம்‘ எனப்படும். அங்கே, `பித்ரு தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும்.
யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.
கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப்பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.
அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யா விட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆடி அமாவாசையன்று மறக்காமல் உங்கள் மூதாதையருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதா ரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள். மறைந்த மூதாதையர்களின் ஆசி, உங்களுக்கு நிரம்பகிடைக்கட்டும்.
தர்ப்பணம் செய்வது எப்படி?
மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.
எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.