ஆரோக்கியம்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்ப காலம்…. முதுகுவலி முதல் அஜீரணம் வரை…

கர்ப்ப காலம்.... முதுகுவலி முதல் அஜீரணம் வரை...

கர்ப்ப காலம்
உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கிட்டதட்ட 9 மாதங்களுக்கு மாற்றும் வல்லமை கொண்டது பெண்களின் கர்ப்ப காலம். தலைமுதல் கால்வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் மொத்தமாக புரட்டிப் போடப்படும் பருவம் இது. எனினும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அற்புதமான நாட்கள் இவை என்பது முக்கியமானது.

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் பிரச்சினை சாதாரணமானது. எனினும், வெள்ளைப்படுதல் பிரச்சினையால் புண், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

கர்ப்ப காலத்தின் தொடக்கமான முதல் மாதத்திலிருந்து பிரசவத்திற்கு பிறகு கிட்டதட்ட 6 மாதங்கள் வரையிலோ, அல்லது அதற்கு மேலோ கூட சில பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். கர்ப்பமடையும்போது முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிகவும் மிருதுவாக மாறுகின்றன. மேலும், கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பதும், கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகின்றன. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது, நின்றுகொண்டே இருப்பது முதுகுவலியை மேலும் மோசமடையவைக்கும். எனவே கர்ப்பமடைந்த சிறிது நாட்களுக்கும், பிரசவத்திற்கு பிறகும் இந்த நிலைகளைத் தவிர்ப்பது நல்லது.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சுத்திணறலும், சரியாக மூச்சு விட முடியாமலும் அதிக பெண்கள் உணர்வார்கள். எனினும், இது இயல்பான ஒன்றுதான். கர்ப்பையில் இருக்கும் குழந்தை கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டம் வழியாக வெளியே கடத்துவதால்தான் இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

குழந்தையால் ரத்தத்தில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடல் சிரமப்படுகிறது. மேலும், கர்ப்ப காலத்தின் நிறைவு பகுதியில் கருப்பையானது உதர விதானத்தை நுரையீரல் வரை மேல்நோக்கி தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்கு போதுமான இடமின்றி போய்விடுகிறது. இதனால், குறிப்பிட்ட அளவு காற்றை கர்ப்பிணிகளால் சுவாசிக்க இயலாமல் போய் சுவாசத்தடை ஏற்படுகிறது. இக்காலகட்டத்தில் இருமல், சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஆகியவை இருந்தால் சரியான மருத்துவம் செய்து கொள்வது நல்லது.

பதினாறாவது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சிக்காக கருப்பை பெரிதாவதன் காரணமாக வயிற்றை அழுத்தும். அதனால், இரைப்பையில் உள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியில் தள்ளப்படும். இதனால், அஜீரணம், நெஞ்செரிச்சல், நெஞ்சு கரித்தல் போன்ற உணர்வுகள் அதிகளவில் தோன்றும். எனினும், இந்த அறிகுறிகள் அதிகமாகத் தோன்றினால் மஞ்சள் காமலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒரே அடியாகச் சாப்பிடாமல் கொஞ்ச கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிடுவது இந்த காலகட்டத்தில் நல்லது. சூடான பால் நெஞ்செரிச்சலுக்கு இதமளிக்கும்.

கர்ப்ப காலகட்டத்தில் தலைவலி ஏற்படுவது சகஜமான ஒன்று. காரணம், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இதைத் தவிர்க்க காற்றோட்டமுள்ள சூழலில் இருக்க வேண்டியது அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் தலைவலி அதிகம் ஏற்படும். மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.

கர்ப்ப காலத்தில் பல் ஈறுகள் மென்மையடையும். அதனால், கடினமான உணவுப்பொருட்களை உண்பது, பற்களை அழுத்தித் தேய்த்தல் போன்ற செயல்கள் பற்களைப் பாதித்து நோய்த்தொற்றினை உண்டாக்கலாம். அதனால், கர்ப்ப காலத்தில் பற்கள் பராமரிப்பு மிகவும் அவசியம். தினசரி இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எக்ஸ்ரே, சிகிச்சை ஆகியவற்றை கர்பப் காலத்தில் மருத்துவர் ஆலோசனையின்றி மேற்கொள்ள வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் சிலருக்கு மூக்கிலிருந்து ரத்த கசிவு ஏற்படும். இது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், நீண்ட நேரத்திற்கு ரத்த கசிவு நீடித்தால் மருத்துவ பரிசோதனை அவசியம். மருத்துவரின் ஆலோசனையோடு காது, மூக்கு, தொண்டை நிபுணரை பார்ப்பது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker