உடற்பயிற்சி செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு பெரிய டம்ளரில் குடிக்க வேண்டும். அப்படிக் குடிப்பதன் மூலம் உடல் சுத்தப்படுத்தப் படுகிறது. அன்றைய தினம் நீங்கள் சாப்பிடும் உணவுகளை நன்றாக செரிக்கச் செய்ய இந்த ஒரு கிளாஸ் தண்ணீர் உதவுகிறது.
அடுத்து ப்ரீ-வொர்க் அவுட் மீல் என்று கூறுகிறார்கள். அதாவது காலையில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு வாழைப்பழமோ, சாலட்டோ உட்கொள்வதன் மூலம் உடற்பயிற்சியை நீங்கள் எந்தவித சோர்வும் இன்றி செய்ய முடியும். மேலும் உடலில் எனர்ஜி அதிகரித்து நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்வதால் கலோரிகளையும் அதிகமாக எரிக்க முடியும்.
அடுத்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி. யோகா, கார்டியோ, வெயிட் லாஸ் உடற்பயிற்சி, நீச்சல், வாக்கிங், ஜாகிங் எப்படி உங்களது உடல், சக்திக்கு ஏற்றவாறு கட்டாயம் எதோ ஒன்றை தினமும் செய்வதை வழக்கமாக்குங்கள். முக்கியமாக இப்போது விட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது. அதனால் அதிகாலையில் வெயில் படுமாறு உடற்பயிற்சி செய்வது நலம்.
அடுத்து போஸ்-வொர்க் அவுட் மீல். இதனை நீங்கள் காலை உணவாகவோ அல்லது ஸ்நாக்ஸாகவோ சாப்பிடலாம். ஸ்நாக்ஸ் என்றால் பப்பாளி, மோர், வேகவைத்த கேரட், முட்டை, ஆப்பிள், பாதாம், இளநீர், வேகவைத்த சிக்கன், ஓட்ஸ் இவற்றில் ஏதோ ஒன்றை நீங்கள் உடற்பயிற்சி செய்தபின் எடுத்துக்கொள்ளுங்கள்.
இவற்றை உடற்பயிற்சி செய்யும் முன்னும் ப்ரீ-வொர்க் அவுட் மீல்ஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு காலையில் நேரம் இல்லை என்றால், நேரடியாக காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு 11 மணிபோல இதில் ஏதோ ஒன்றை உட்கொள்ளுங்கள். உங்களது காலை உணவு புரதச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கட்டும். இப்படி உங்களது காலையை தினமும் ஆரோக்கியமானதனாக மாற்றினாலே உடல் எடைக் குறைக்கும் வழிமுறை சுலபமாக ஆகிவிடும். சீக்கிரம் உடல் எடையும் குறையும்!