நாப்கினை தொடர்ந்து பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
ரசாயனங்களால் உருவான நாப்கினைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதும், மாதவிடாய் நாள்களில் கவனக்குறைபாட்டால் மேற்கொள்ளும் ஆரோக்கியத்துக்கு எதிரான பழக்கங்களாலும் ஒவ்வாமை முதல் கருப்பைப் பிரச்சனைகள் வரை ஏற்பட வாய்ப்புண்டாகிறது. எனவே, கீழ்க்காணும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
1. நாப்கின்கள் பளிச் வெண்மை நிறத்தில் இருக்க, அதில் பிளீச்சிங் ஏஜென்ட் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு பிளீச் செய்யப்பட்ட நாப்கினைப் பயன்படுத்தும்போது அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, நாப்கின் வாங்கும்போது அதன் பேக்கிங் கவரில் ‘அன்பிளீச்டு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
2. பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப் படுகின்றன. மேலும் ஈரத்தை உறிஞ்சுவதற்கான ரசாயனங்கள், நறுமணத்துக்காகச் சேர்க்கப்படும் வாசனைத் திரவியங்கள் என நாப்கின் தயாரிப்பில் சேர்க்கப்படும் பொருள்கள் பல. இந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது கருப்பை பாதிப்பு, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விலையுயர்ந்த ‘அல்ட்ரா தின்’, ‘ஜெல் டெக்னாலஜி’, ‘லீக்கேஜ் ப்ரூஃப்’ ரக நாப்கின்களைவிட, விலை மலிவான காட்டன் பேடுகளே பாதுகாப்பானவை.
3. நாப்கின் வாங்கும்போது, அது வாலன்டரி தரக்கட்டுப்பாடு ஐஎஸ்ஐ தரச் சான்றிதழ் 5405 பெற்றிருப்பதை உறுதிசெய்த பின்னர் வாங்கவும். அதேபோல, உற்பத்தி தேதி, காலாவதி தேதி போன்ற அடிப்படை விவரங்களையும் செக் செய்துகொள்ளவும்.
4. ஒவ்வொரு முறை நாப்கின் மாற்றும்போதும் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீர் கொண்டு சுத்தம்செய்வது நல்லது. எக்காரணம் கொண்டும் பிறப்புறுப்பில் ஆன்டி செப்டிக் லோஷன், சோப் ஆகியற்றைப் பயன்படுத்தக்கூடாது.
5. நாப்கின்கள் அல்ட்ரா தின், ரெகுலர், மேக்ஸி, ஓவர் நைட், சூப்பர் எனப் பல ரகங்களில் கிடைக்கின்றன. ‘நீண்ட நேரம் ஈரத்தைத் தக்கவைக்க வல்லது’ என்று அவை விளம்பரப் படுத்தப்பட்டாலும், எந்த ரக நாப்கினைப் பயன்படுத்தினாலும், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொள்வது அவசியம். நாப்கின் ஈரத்தை உறிஞ்சியிருந்தாலும், அல்லது அதிகமாக உதிரப்போக்கு இல்லையென்றாலும்கூட, நாள் முழுக்க ஒரே நாப்கினைப் பயன்படுத்துவது தவறான பழக்கம். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் நாப்கின் மாற்றுவது நல்லது.
6. மாதவிடாய் நாள்களுக்கெனத் தனி உள்ளாடைகளைப் பயன்படுத்தலாம். அவற்றை ஆன்டிசெப்டிக் லோஷனில் அலசி, வெயிலில் நன்கு காயவைத்துப் பயன்படுத்தலாம்.
7. ஈரம்பட்டுவிடக்கூடாது என்பதற்காகச் சில பெண்கள் இரண்டு பேடுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது உண்டு. இது சில நேரங்களில் வலியை ஏற்படுத்தும். மேலும், பிறப்புறுப்பில் ஒவ்வாமை, சிறு கொப்புளங்கள் போன்ற பிரச்னைகளும் உண்டாகலாம்.
8. பயன்படுத்தவிருக்கும் நாப்கினை, பேக்கிங் பிரித்தபடி கைப்பை, டிரெஸ்ஸிங் டேபிள் எனப் போட்டுவைக்கும்போது, அங்கெல்லாம் உள்ள அழுக்கும் கிருமிகளும் நாப்கினில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மேலும் நாப்கின் மாற்றக் கழிப்பறைக்குச் செல்லும்போது, கழிப்பறையின் ஜன்னல், கதவு, ஃபிளஷ் டாங்க் எனப் தூசு படிந்துள்ள இடங்களில் புதிய நாப்கினை வைக்கக்கூடாது. பிறகு, அதை அங்கிருந்து எடுத்துப் பயன்படுத்தும்போது, கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும். பயன்படுத்தவிருக்கும் நாப்கின், பேக்கிங் பிரிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பேப்பரில் சுற்றிச் சுத்தமான பாலிதீன் பைகளில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தவும்.
9. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு பயன்படுத்திக் கழுவவும். பயன்படுத்திய நாப்கினை அப்புறப்படுத்திய பின் கைகளைக் கழுவாமல் பாக்கெட்டில் இருந்து புதிய நாப்கினை எடுக்கும்பட்சத்தில், பாக்டீரியாக்கள் கைகளின் மூலம் பரவி நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், அதைத் தவிர்க்கவும்.
10. நாப்கினை அப்புறப்படுத்துவதில் சமூக அக்கறை வேண்டும். ஃபிளஷ் செய்வது, கழிப்பறையிலேயே ஓர் ஓரத்தில் வீசிவிட்டு வருவது போன்ற பழக்கங்கள் தவறு. இது கழிப்பறையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு அருவருப்புடன் நோய்த்தொற்றையும் தரும். பயன்படுத்திய நாப்கினை பேப்பரில் சுற்றி, குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.