ஃபேஷன்எடிட்டர் சாய்ஸ்

குழந்தைகளுக்கு தரமான கல்வி

குழந்தைகளுக்கு தரமான கல்வி

குழந்தைகளுக்கு தரமான கல்வி
குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்து தங்களது குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கிறார்கள். கல்வி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் படித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதே போல தமிழகத்தை பொறுத்தவரை உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதையொட்டி கல்வி கற்பிக்கும் நிறுவனங்களும் அதிகமாகி வருகிறது. ஆனால் கல்வி கற்றவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு என்பது போதுமானதாக இல்லை. இதனால் படித்த மாணவ-மாணவிகள் வேலைக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது. படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்காத நிலை என்பது அதிகரித்து விட்டது.

ஏதோ ஒரு துறையில் படித்து விட்டு, மற்றொரு துறையில் வேலை பார்க்கும் நிலை உள்ளது. இதனால் படித்தவர்களின் திறன் பயன்படாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத நிலையில் படிப்பு என்பது வெறும் சான்றிதழ் என்ற அளவில் மதிப்பிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். எனவே ஒவ்வொரு மாணவரும் ஈடுபட விரும்பும் தொழில்களை பாடத்திட்டங்களாக வடிவமைக்க வேண்டும்.

வகுப்பறை, மேஜை, நாற்காலி என்ற அளவில் இருக்கும் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட வேண்டும். அங்கு ஒவ்வொரு தொழில் சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அந்த தொழில் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் குறைந்தது ஒரு ஆண்டாவது செயல்முறையாக செய்ய வேண்டும். அவர் எந்த தொழில் சார்ந்து பயிற்சி பெறுகிறாரோ அதற்குரிய சான்றிதழை வழங்க வேண்டும். மேலும் படிக்கிற காலத்தில் மாணவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் தைரியமாக தொழில்களில் ஈடுபட முடியும். இல்லையென்றால் வேலைக்கு செல்வதற்காக கருவியாகத்தான் படிப்பு சான்றிதழ் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் தொழிலாளர் களை உற்பத்தி செய்வதாக தான் கல்வி பாடத்திட்டம் இருக்கும். தொழில் முனைவோர்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அரசின் கொள்கைகள், நிதி உதவி, மானியம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதிக வேலை வாய்ப்பும், தினசரி தேவைகளும் உள்ளதுமான விவசாய தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது தான் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதை செய்வதன் மூலம் தான் நகரங்களை நோக்கி மக்கள் குவிவதை தடுக்க முடியும். தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஊருக்கு, ஊர் வேறுபடும். அதை கண்டறிந்து புதிய, புதிய தொழில்கள் தொடங்க படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். உலகமயமாகிய பொருளாதார சூழலில் தொழில் நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் போட்டி இருந்தால் தான் வெற்றிக்கான வழி கண்டறிந்து அடைய முடியும். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள கல்வியின் பாடத் திட்டமும், தொழில்துறையின் கொள்கைகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை சாத்தியமாக்கி விட்டால் படித்த மாணவர்கள் வேலை கேட்பவர் என்ற நிலையில் இருந்து வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள். இதன் மூலம் வேலை இல்லா திண்டாட்டம் நீங்கி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வறுமை ஒழிய வாய்ப்பு ஏற்படும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker