குழந்தைக்கு சரியாக மசாஜ் செய்வது எப்படி?
பிறந்த குழந்தைகள் சத்தான உணவு உட்கொண்டு ஆரோக்கியமாக வளர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்களுக்கு மசாஜ் செய்வது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால், சிறந்த இரத்த ஓட்டம், அவர்களின் தொடு உணர்ச்சிகள், அவர்களின் உடல் நலன், உடலின் ஈரப்பதம் என அனைத்தும் மேம்படுகின்றன. மேலும் குழந்தைகளின் உடலில் காயம் பட்டிருந்து, அது கவனத்திற்கு வராது போயிருந்தால், அப்படிப்பட்ட காயங்களை, தடுப்புகளை மசாஜ் செய்யும் போது கண்டறியலாம்.
இயற்கை முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தூய தேங்காய் எண்ணெய் கொண்டு, குழந்தையின் கால்கள் தொடங்கி தலை வரை மசாஜ் செய்ய வேண்டும்; காலில் இருந்து தொடங்குவதால், குழந்தையின் உடலில் உள்ள சூடு எளிதில் வெளியேறும். குழந்தையை குளிப்பாட்டும் போதும் தண்ணீரை காலில் இருந்தே ஊற்றத் தொடங்குவர்; அதுவும் இந்த சூடு வெளியேறும் காரணத்திற்காகவே!
குழந்தையின் கால்களில், மிருதுவாக உருவிவிட்டு மசாஜ் செய்யவும். தொடையிலிருந்து தொடங்கி, கீழ்வரை மசாஜ் செய்யவும்.
குழந்தையின் உள்ளங்கால்களில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.
ஒவ்வொரு கால் விரலையும், நன்றாக எண்ணெய் தடவி, சொடக்கு போடுவது போல், மெதுவாக இழுத்து விடவும்.
குழந்தையின் கைகளில், மெதுவாக மேலிருந்து கீழாக உருவிவிட்டு மசாஜ் செய்யவும்.
இரு கைகளின் மணிக்கட்டுகளிலும் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.
குழந்தையின் கை விரல்கள் ஒவ்வொன்றிலும் எண்ணெய் தடவி, சொடக்கு போடுவது போல், மெதுவாக இழுத்து விடவும்.
குழந்தையின் மார்புப் பகுதியில், உங்கள் உள்ளங்கைகளைக் கொண்டு, மெதுவாக மசாஜ் செய்யவும்.
குழந்தையின் வயிற்று பகுதி முழுதும், நன்றாக எண்ணெய் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும்.
குழந்தையின் முதுகு பரப்பு முழுவதும், நீவிவிடும் வகையில், மசாஜ் செய்யவும். முதுகெலும்பு தொடரிலும் நன்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும்.
குழந்தையின் பின்புட்டப்பகுதியிலும் எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
குழந்தையின் முகம், அது பிறந்த புதிதில் நீங்கள் எப்படி மசாஜ் செய்துள்ளீரோ அதை பொருத்தே அமையும். ஆகையால், முகத்தில் கவனத்துடன் மசாஜ் செய்யவும்.
குழந்தையின் தலையின் அமைப்பும் மசாஜினை பொருத்து மாறுபடும். அதனால், தலையில் மசாஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.
மசாஜ் செய்வதால், குழந்தைகள் பலம் அடைவர்; அவர்களின் எலும்பு வளர்ச்சி மேம்பாடு அடையும். இது அவர்களுக்கு ஓய்வு உணர்வையும் அளிக்கும். மசாஜினை குழந்தைகள் மகிழும் வகையில் செய்துவிடவும்..!