உறவுகள்

காதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி?

கல்வி, வேலை என்பது போல காதலும் வாழ்க்கையில் நம்மைக் கடந்து போகிற ஒரு நிகழ்வு தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அது வெற்றியை நோக்கிப் பயணித்தால் திருமணத்திலும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் இடம் கொடுக்காமல் போனால் பிரேக் அப்பிலும் முடிகிறது என்ற எளிய உண்மையைப் புரிந்து கொண்டாலே போதும். பிரேக் அப் சோகத்திலிருந்து மிக விரைவில் வெளியேறிவிட முடியும்.

வழக்கமாக உங்களுக்கு பிடித்ததை விட உங்களுடைய காதலருக்கு பிடித்தது போலத்தான் அதிகமாக ஆடைகள் அணிந்திருப்பீர்கள். நடை பாவனை இருந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு முதலில் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரி ஆடைகளை அணியுங்கள். புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வெளிப்புறத் தோற்றத்தில் நீங்கள் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள் கூட உங்கள் மனதை உற்சாகமாக மாற்றிவிடும்.நடந்து முடிந்த பழைய விஷயங்களைத் தோண்டி ஆராய்வதில் எந்த பயனும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் உங்கள் முன்னால் காதலனை நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் உங்கள் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்து விடுங்கள். சமூக ஊடகங்களில் அவர்களுடன் தொடர்பில் இருப்பதால், நம் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவர்களை சார்ந்து வாழாமல் நீங்கள் தனியாக சுதந்திரமாக உணர்வதற்கு, அவர்களுடன் இருக்கும் சமூக ஊடகத் தொடர்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.

காதலித்தபோது கிடைத்த பரிசுப் பொருட்களைத் தூக்கியெறிவது தான் நல்லது. அதை பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதெல்லாம் வீண். அது சிலருக்கு தன்னை குற்றவாளியாகவும் தன்னுடைய இயலாமையையும் அல்லது தான் காதலித்த நபர் மீது கோபத்தையும் வன்மத்தையும் மட்டுமே அதிகரிக்கச் செய்யும். அதற்கு உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லையெனில், நீங்கள் அந்த மனநிலையிலிருந்து வெளியேறி பக்குவமடையும் வரையில், உங்கள் நம்பிக்கைக்குரிய யாரிடமாவது கொடுத்து வைத்திருங்கள்.நீங்கள் சந்தோஷமாக இருப்பது போல் பாசாங்கு காட்ட வேண்டாம். கோபம், சோகம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை முதலில் நீங்கள் அதையதை அப்படியே வெளிக்காட்டக் கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் அந்த உணர்ச்சிகளில் இருந்து எளிதில் வெளிவர முடியும். வருந்துவதும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான். அதனால் அந்த ஆறாப்புண் விரைவில் குணமடையும்.

இதுவரையிலும் காதலனுடன் மட்டுமே வெளியில் சென்று, நண்பர்களையெல்லாம் மறந்து ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருப்பீர்கள். அதனால் மீண்டும் நண்பர்களைத் தேடிப் போங்கள். இதுவரை வாழ்ந்த ஒரு சிறிய பாதுகாப்பு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். இதுவரை செய்யத் தயங்கிய சில விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker