இடுப்பு, அடிவயிறு, கழுத்தை வலுவாக்கும் ஆசனம்
ஒரே நேரத்தில் மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனம் இரண்டையும் இணைத்து செய்யும் இந்த ஆசனம் சக்ரவாகாசனம் ஆகும். விரிப்பில் கால்களை முழங்காலிட்டு அமர்ந்து மெதுவாக இரண்டு கைகளையும் முன்னோக்கி குனிந்து தரையில் ஊன்ற வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றி, உடலை ஒரு மேஜையைப்போல் சமமாக வைக்கவும்.
வயிற்றை உட்பக்கமாக இழுத்துக் கொண்டு தலை தரையை நோக்கி குனிந்து பார்க்கவேண்டும். இது மர்ஜரியாசனம். பின்னர் முதுகை வளைத்து தலையை அண்ணாந்து பார்க்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இது பிடிலாசனம். இதுபோல் மாற்றி, மாற்றி இரண்டு நிலைகளையும் 3 முதல் 5 வரை செய்யலாம்.
பலன்கள்
உடலுக்கு சமநிலை கிடைப்பதால் கூனில்லாத நல்ல தோற்றத்தை கொடுக்கும். முதுகுத்தண்டுவடம் மற்றும் கழுத்துக்கு வலு கிடைக்கிறது. இடுப்பு, அடிவயிறு மற்றும் முதுகிற்கு நல்ல நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது. உடல்முழுவதும் ஒருங்கிணைப்பதால் உணர்வுகளை சமநிலைப்படுத்துகிறது. வயிறு, சிறுநீரகம் மற்றும் அட்ரினல் சுரப்பிகளை தூண்டுகிறது.