எடிட்டர் சாய்ஸ்

சிரித்து வாழ வேண்டும்

தினந்தோறும் நம் வாழ்வில் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் நகைச்சுவைகளை ரசித்து வாழ்ந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை செய்திருப்பேன்” என்றார் காந்தியடிகள். நகைச்சுவை உணர்வு மிக்கவர் காந்தியடிகள். காந்தியடிகளை திட்டி ஒருவர் மடல் அனுப்பி இருந்தார். அதனைப் படித்துப் பார்த்து காந்தியடிகள் கோபம் கொள்ளவில்லை. அம்மடலை கிழித்துவிட்டு, அதில் இணைத்திருந்த பின்னை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டார். இது மட்டுமே எனக்கு பயன்படும் என்றார். ஆம், சினம் காத்திட, மனநிம்மதி கிடைத்திட உதவுவது நகைச்சுவை உணர்வு.கல்வி அதிகாரி, பள்ளிக்கு ஆய்வு சென்று இருந்தார். ஒரு மாணவனைப் பார்த்து ஜனகனின் வில்லை உடைத்தது யார்? என்றார். நான் உடைக்கவில்லை என்று அழுதான் மாணவன். அருகிலிருந்த ஆசிரியரிடம் கேட்டார் என்ன இது? என்று. கோபி நல்லவன் உடைத்து இருக்க மாட்டான். முனியாண்டி வரவில்லை இன்று. அவன் உடைத்து இருப்பான் என்றார் ஆசிரியர்.

தலைமையாசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினார் கல்வி அதிகாரி. நான் ஓய்வு பெற இரண்டு மாதங்களே உள்ளன. அந்த ஜனகன் வில் எவ்வளவு என்று சொல்லுங்கள். நான் வாங்கித் தந்து விடுகிறேன் என்றார். சிரித்துக்கொண்டே சென்று வீட்டில் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி சிரித்தார். கடைசி வரை ஜனகனின் வில்லை உடைத்தது லட்சுமணன் என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை என்றார். உடன் மனைவி நீங்களும் தப்பா சொல்றீங்க, ஜனகனின் வில்லை உடைத்தது அனுமன் அல்லவா? என்றார். கடைசி வரை ராமன் என்பதை யாருமே சொல்லவில்லை.

சாக்ரடீஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவரைத் திட்டிக்கொண்டே இருந்தார் அவரது மனைவி. திடீரென கோபம் அதிகமாகி மேலே இருந்து தண்ணீரை ஊற்றினார். சாக்ரடீஸ் கோபம் கொள்ளாமல் சொன்னார், இதுவரை இடி இடித்தது, இப்போது மழை பொழிகிறது என்றார்.

சைவ விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு முடித்தப்பின் சர்வர் கேட்டார். சாப்பாடு எப்படி இருந்தது என்று. இதுவரை இப்படி ஒரு முருங்கைக்காய் சாப்பிட்டதே இல்லை. சாம்பாரில் இருந்த முருங்கைக்காய் சூப்பர் என்றார். என் காதிலிருந்து தவறி விழுந்த பென்சில் அது, முருங்கைக்காய் அல்ல என்றார் சர்வர்.அசைவ விடுதிக்கு சாப்பிடச் சென்றனர். நண்பனிடம் சொன்னான். சர்வரை கிண்டல் செய்கிறேன் பார் என்று சொல்லிவிட்டு, மூளை இருக்கா? என்றான். இதற்குமுன் வந்தவர்களுக்கு எல்லாம் இருந்தது. உங்களுக்குத்தான் இல்லை. தீர்ந்து விட்டது என்றார் சர்வர்.

ஒரு மரத்தில் சின்ன மணி, பெரிய மணி என வரிசையாக மணியாக கட்டி இருந்தன. இது என்ன என்று கேட்டதற்கு, சின்னப் பொய் சொன்னால் சின்ன மணி அடிக்கும், பெரிய பொய் சொன்னால் பெரிய மணி அடிக்கும் என்றனர். ஒரு நேரம் சின்ன மணி பெரிய மணி எல்லா மணியும் டொய் டொய் என்று அடித்ததாம். என்ன? என்று கேட்டதற்கு மரத்தின் அடியில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அதில் ஒரு கட்சி சார்புடைய தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்தார்களாம்.

குடிகாரன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் கண்ணே உனக்கு தாஜ்மஹால் கட்டவா? வசந்த மாளிகை கட்டவா? என்றான். அதெல்லாம் வேண்டாம். முதலில் உன் இடுப்பில் வேட்டியை ஒழுங்காகக்கட்டு என்றாள் மனைவி.

உலக வரைபடத்தில் இந்தியா எங்கு உள்ளது? என்று கேட்டார் ஆசிரியர். அதற்கு மாணவன் மாட்டேன், மாட்டேன் என்று சொன்னான். தெரியாது என்று சொல்லு, பரவாயில்லை, மாட்டேன், மாட்டேன் என்கிறாயே ஏன்? என்றார்.’ நான் என் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டேன், என்றான் மாணவன். வகுப்பறையே சிரித்து மகிழ்ந்தது.

உங்களுக்கு காய்ச்சலே இல்லையே? எதுக்கு வந்தீங்க என்றாள் நர்சு. நான் கூரியர் தபால் கொடுக்க வந்தேன். அதை சொல்வதற்குள் தர்மா மீட்டரை நீங்கள் தான் வைத்து வீட்டீர்களே? என்றார்.

போன வருடம் தீபாவளிக்கு தந்த அல்வா மாதிரியே கொடுங்க தம்பி. கவலைப்படாதீங்க அதே அல்வாவே இன்னும் இருக்கு தாரேன் என்றார்.இப்படி தினந்தோறும் நம் வாழ்வில் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் நகைச்சுவைகளை ரசித்து வாழ்ந்தால் கவலை கொள்ளத் தேவை இல்லை. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வாழ்வில் கோபம் என்பதை அகற்றி சிரித்து வாழ வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker