வீட்டிலேயே ஜிம் இருக்கா? – அப்போ கவனிக்க வேண்டியவை
ஜிம், ஃபிட்னெஸ் பயிற்சி மையங்களுக்குச் சென்றால்தான் ஃபிட்டான உடலைப் பெற முடியுமா என்ன? அப்படியெல்லாம் இல்லை. பலருக்கு ஜிம்முக்குச் செல்ல நேரமே இருப்பது இல்லை. அதனால், உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி, வீட்டிலேயே குட்டி ஜிம் அமைத்துவிடுகிறார்கள். வீட்டிலேயே ஜிம் அமைத்து, ஃபிட்டான உடலைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள்…
படுக்கை அறை, பூஜை அறைபோல முடிந்தவரை ஜிம்முக்கு எனத் தனி அறை ஒதுக்குங்கள். ஜிம் மேட் தரையில் பதிக்க வேண்டியது அவசியம். ஜிம் கருவிகள் மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே, ஜிம் அமைக்கும் அறையில் ஜன்னல்களை வைக்காதீர்கள். அதே சமயம் வெளிச்சத்துக்கு கண்ணாடித் திரை வைப்பது நல்லது. ஜிம் அறையில் குளிர்சாதன வசதி இருப்பது நல்லது.
தரையில் செய்யும் பயிற்சிகள் அவசியம். எனவே, ஜிம் அமைக்கும் அறையில் தரையில் இரண்டு மூன்று பேராவது ஒரே சமயத்தில் நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ உடற்பயிற்சி செய்ய ஏதுவாக இடம் ஒதுக்குவது அவசியம்.
வீட்டில் எத்தனை பேர் உள்ளனர், யார் யாரெல்லாம் ஜிம் பயன்படுத்துவார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிக் கருவிகள் தேவைப்படும் என்பதைத் திட்டமிட்டு ஜிம் கருவிகளை வாங்க வேண்டும். வயதானவர்கள், பெண்களுக்கு கார்டியோ பயிற்சிக்கான சாதனங்கள் சிறந்தவை. இளைஞர்களுக்கு, கார்டியோ மற்றும் உடலை உறுதிப்படுத்தும் கருவிகளை வாங்கலாம்.
வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கு முன்னர், உடற்பயிற்சியாளர், பிசியோதெரப்பி நிபுணரிடம் ஆலோசனைகளைக் கேட்டு, ஜிம் அறையை அமைக்கலாம். ஜிம்முக்குச் சென்று ஒவ்வொரு ஜிம் கருவியையும் எப்போது, எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்றாகக் கற்றுக்கொண்ட பின்னரே கருவிகளை வாங்கிப் பொருத்தி, பயன்படுத்த வேண்டும்.
டிரெட்மில் போன்றவை பேட்டரியில் இயங்கக்கூடியவை. சுமார் 1.5 கிலோ வாட் திறனில் இயங்கக்கூடிய டிரெட்மில் பயன்படுத்துவது நல்லது. விலை குறைந்தது என்பதற்காக மட்டும் ஜிம் கருவிகளை வாங்கிவிடக் கூடாது, வாரன்டி இருக்கிறதா, டிரெட்மில்லில் ஏதேனும் பிரச்னை என்றால், வீட்டுக்கு வந்து சரிசெய்து கொடுப்பார்களா என்பதை எல்லாம் நன்கு விசாரித்த பிறகே வாங்க வேண்டும்.