செயல் இழக்க வைக்கும் செயலிகள்…
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ எனும் பழமொழி, ஆப்புகள் என்றழைக்கப்படும் செயலிகளை நினைத்து சொல்லப்பட்டிருக்குமோ என்று எண்ணத்தோன்றும் அளவு இந்தச் சமுதாயத்தை செயலிகள் சீரழிக்கத்தொடங்கியுள்ளன.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ எனும் பழமொழி, ஆப்புகள் என்றழைக்கப்படும் செயலிகளை நினைத்து சொல்லப்பட்டிருக்குமோ என்று எண்ணத்தோன்றும் அளவு இந்தச் சமுதாயத்தை செயலிகள் சீரழிக்கத்தொடங்கியுள்ளன. இணைய ஊடகத்தின் கட்டில்லா சுதந்திரம் மனித இனத்தை மாயத்திரைகளால் பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. தூக்கம் தொலைத்த நம் இரவுகள் துக்கம் சுமந்து நீண்டுகொண்டே இருக்கின்றன. தேவையோ தேவையில்லையோ நம் ஒவ்வொரு அசைவையும் பொதுவெளியில் பகிர்ந்து, அதில் கிடைக்கும் விருப்பக்குறிகளுக்காக நாம் இறப்புவீட்டுக்குச் சென்றதைக்கூடத் தம்பட்டம் அடிக்கும் தற்படப்பிரியர்களாய் மாற்றி நம்மை இணைய உலகம் அடிமையாக்கியிருக்கிறது.
நம் இறப்பு என்று நிகழும்? என்று ஒரு செயலி ஜாதகம் சொல்கிறது, நம் முகத்தை அழகுபடுத்தி நாம் விரும்பும் இன்னொரு முகத்தோடு இணைத்துத் தருகிறது இன்னொரு செயலி, நாம் இன்று எத்தனை அடிகள் எடுத்துவைத்தோம், ரத்தத்தில் சர்க்கரை அளவு என்ன என்பதை எவ்விதமான உடல் சோதனை இல்லாமல் நம் விரல்அழுத்தத்தைக் கொண்டு ஆருடம் சொல்கிறது ஒரு செயலி. ஓரிடத்தில் இருந்துகொண்டு வேறோர் இடத்தில் இருப்பதாகக் கணவர் பொய்சொல்கிறாரா? என்று மனைவிக்கு வேவுபார்த்துச் சொல்கிறது வேறோர் செயலி. பிஞ்சுமனங்களில் நஞ்சை விதைக்கும் ஆபாசப்படங்களைத் தந்து குழந்தை மனங்களைக் குறிவைத்துக் குதறிக்கொண்டிருக்கிறது பிறிதோர் செயலி.
தேவையற்ற செயலிகளை நம் செல்பேசிகளில் இறக்கி நம் தனிப்பட்ட தகவல்களை உலகின் பார்வைக்குக் கடைவிரித்திருக்கிறோம். கேமரா செல்போன் வாங்கிவிட்டோம் என்கிற ஒரே காரணத்தினால் நம் குடும்ப நிழற்படங்கள் இன்று இணையப் பெருவெளியில் நிரம்பிக்கிடக்கின்றன. எதையும் மூளையால் பகுத்தறிந்த சமூகம் இன்று கேமராக் கண்களால் எல்லாவற்றையும் குறுகுறுவென்று உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது. 160 கோடி மக்களுக்கும் மேல் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி, நம் குழுக்களில் நாம் பகிரும் எல்லாத் தகவல்களையும் கண்காணித்து உட்பதிந்து வைத்திருக்கிறது. , நம் செல்பேசி எண்கள் நமக்கே தெரியாமல் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் கோர்த்துவிடப்பட்டு யார்யார் படங்களோ நம் செல்பேசிகளை நிறைத்துவிடும் கொடுமை நடந்துகொண்டே இருக்கிறது.
எப்போது பார்த்தாலும் செல்போனுக்குள் மூழ்கியிருக்காதே என்று கணவர் கண்டித்ததற்காக மனமுடைந்து விஷம் அருந்தி அதை அச்செயலியில் பதிவேற்றிவிட்டு இறந்துபோன பெண்ணைப் பார்த்து உலகம் உறைந்து போனதே. திரைப்படக்காட்சி வசனங்களின் பின்னணியில் அரிவாளைத் தரையில் உரசியபடி உச்சகட்ட வேகத்துடன் மோட்டார் சைக்கிள்களில் நள்ளிரவு நேரம் பயணிக்கும் இளைஞர்களின் ஆபத்தான பெருமைகளை ஓர் செயலி பதிவேற்றம் செய்வது எவ்வளவு ஆபத்தானது? புதிதாக நாம் ஒருவரின் செல்பேசி எண்ணை நம் செல்பேசியில் சேமித்தவுடன் அடுத்த வினாடி அவர்களின் படத்தோடு அவர்களை முகநூல் உங்களுக்கு நட்பறிமுகம் செய்து வைக்கிறதே.
நம்மைப் பற்றிய தகவல்களை நம்மிடமே பெறப்பட்டு நம்மையே நம்மிடமே இணைய உலகம் விற்றுக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். உலகம் முழுவதும் 230 கோடிக்கும் அதிகமாகப் பயன்படுத்துனர்களை கொண்ட முகநூல் செயலியில் நம் பிறந்தநாள், நம் செல்பேசி எண்கள், நம் இல்ல அலுவலக முகவரி, நாம் யாருடன் என்ன பேசுகிறோம்? நம் நண்பர்கள் எந்தெந்த நாட்டில் இருக்கிறார்கள்? நம் விருப்பமென்ன? போன்ற விவரங்கள் விரல்நுனியில் இருக்கிறது. முகநூலில் பதிவிடப்படும் ஏதாவது ஒரு பதிவின்கீழ் பதிவிடப்பட்ட பின்னூட்டங்களின் மொழியையும் அது சுட்டும் முகம்சுளிக்கவைக்கும் எதிர்வினைகளையும் கண்டால் சமூகத்தின் போக்கு இன்று எவ்வாறு செல்கிறது என்று நமக்குத் தெளிவாகப் புரியும். நானூறுகோடிப் பயனர்களைக் கொண்ட கூகுள், எந்த நேரம் நாம் இணையத்திற்கு வருகிறோம்? நாம் அடிக்கடி இணையத்தில் எதைத்தேடுகிறோம்?
யார்யாருக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்? நம் நண்பர்கள் யார்யார்? நம் வங்கி விவரங்கள் என்ன? நம் வருமானம் என்ன? வருமானவரி எவ்வளவு கட்டுகிறோம்? எந்தெந்தப் பொருட்களை இணையத்தின் மூலமாக வாங்கியிருக்கிறோம்? நாம் எங்கே பயணிக்கிறோம்? இப்போது நாம் எங்கே இருக்கிறோம்? நமக்கு எத்தனைக் கடன் அட்டைகள் உள்ளன? நம் நண்பர் பட்டியலில் யார் யார் உள்ளனர்? நாம் யார் யார்க்கு குறுஞ்செய்திகள் அனுப்புகிறோம்? என்று மிகத்தெளிவாக அறிந்துவைத்துள்ளது. அதைத் தேவைப்படுகிறவர்களுக்குத் தேவையான நேரத்தில் தந்து வணிகமாக்குகிறது.
செயலிகள் மூலமாய் நாம் பொருட்கள் வாங்கத் தொடங்கிய பின் உள்நாட்டு வணிகநிறுவனங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டன என்பதை நாம் அறிவோமா? வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் டுவிட்டரில் உருவாக்கிப் பிரபலமாக்கப்படும் ஹேஷ்டாக்குகளுக்குப் பின்னால் சப்தமின்றி அரங்கேற்றப்படும் பல அநீதிகளின் குரலை நாம் அறிவோமா? நம்மை நாமே ரசிப்பதையும் திரைநட்சத்திரங்களின் அங்க அசைவுகளுக்கு ஏற்ப போல செய்வதும் அதைப் பொதுவெளியில் பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கான விருப்பக்குறிகளையும் நாகரிகமில்லாமல் ஆபாசமாக இடப்படும் பின்னூட்டங்களைப் பெறுவதில் என்ன பலன் இருக்கப்போகிறது?
நம்மைப் பற்றிய போலிபிம்பங்களுக்காக செயலிகளில் நம் வாழ்வையும் நேரத்தையும் தொலைப்பதில் என்ன நியாயம்? நம் வாழ்வில், நம் குடும்பங்களில் நடைபெறும் தேவையற்ற இந்தக் குழப்பங்களுக்கும் கூச்சல்களுக்கும் இப்படிப்பட்ட செயலிகள் காரணமாக நாம் அனுமதிக்கலாமா? பற்றி எரியும் பிரச்சினைகளை லாவகமாகத் திசைதிருப்பும் செயலிகளால் சாமானியர்களுக்கு இழப்பே அதிகம். எப்படி அடுப்பு தன் மேல் ஏற்றப்பட்ட பாத்திரத்தைச் சூடுதணியாமல் கொதிநிலையில் வைத்திருக்கிறதோ அதேபோல் ஒன்றின் பின்னால் இன்னொன்று என்று உணர்வுமயமான பிம்பங்களை உருவாக்கி போலி பிம்பங்களை இந்தச் செயலிகள் ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காய் சமுதாய வீதியில் உலவவிடுகின்றன.
ஒரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டுமானால் ஆசையைத் தூண்டி அலையவைக்கவேண்டும். அதைத்தான் செயலிகள் செய்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியின் புதியவடிவத்தைக் கொண்டே தன்னை இச்சமூகம் கெடுத்துக்கொண்டிருக்கும் நிகழ்வுதான் இந்த நூற்றாண்டின் உச்சகட்டக் கொடுமை. ஆப்புகள் எனும் செயலிகள் நமக்கு நாமே வைத்துக்கொண்டிருக்கும் ஆப்புகளோ என்று எண்ணத்தோன்றுகிறது.