மாமியார் மருமகள் சண்டை ஏன் வருகிறது..?
சினிமாவில் எப்போது சண்டை கோழிகளாகவே காட்டப்பட்ட மாமியார் மருமகள் உண்மையிலும் அப்படித்தான் இருக்கிறாரக்ளா? இருவருக்குள்ளும் நடைபெறும் மர்ம யுத்தங்களுக்கு யார் காரணம் என்பதை பார்க்கலாம்.
திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். சினிமாவில் எப்போது சண்டை கோழிகளாகவே காட்டப்பட்ட மாமியார் மருமகள் உண்மையிலும் அப்படித்தான் இருக்கிறாரக்ளா? இருவருக்குள்ளும் நடைபெறும் மர்ம யுத்தங்களுக்கு யார் காரணம் என்பதை பார்க்கலாம்.
பையன் பிறந்துவிட்டால் சந்தோசப்படும் பெண்கள் மகனுக்கு திருமண வயது வந்துவிட்டால் பெரும் சோகமாகிவிடுகிறார்கள். காரணம், இதுவரை தன்னுடைய பலம் தன் வருங்காலத்தை பாதுகாக்கும் அரணாக நினைத்திருந்த மகனை உரிமை கொண்டாட வந்துவிடும் மருமகள். இது உரிமை போராட்டமாக அணுக வேண்டிய அவசியமே இல்லை.
இயற்கையான விஷயம் தான் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமண வயதில் மகன் கொடுக்கும் முன்னுரிமைகளை எல்லாம் பெரிது படுத்தி கவலைப்படாதீர்கள். உங்களுக்கான இடம் எப்போதுமே மகன் மனதில் இருக்கும். அந்த இடம் எப்போதும் மாறாது. மருமகள், கிட்டதட்ட 20 வருடங்கள் வாழ்ந்த சூழலை, வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய இடத்திற்கு வந்திருக்கிறாள். புதிய இடத்தை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை கொடுத்திடுங்கள்.
திருமணம் செய்து கொண்ட நாளின் முதலே பொறுப்புகளை தூக்கி மருமகள் தலையில் வைக்காதீர்கள். தட்டிக் கொடுங்கள், உரிமையாய் பழகுங்கள். இன்னொரு வீட்டுப் பெண், குறைந்த வரதட்சனை, சொத்து இல்லை என்ற சங்கதிகளை எல்லாம் மறந்துவிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான மகனின் மனைவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மருமகளைப் பற்றிய முன் அபிப்பிராயங்களை தவிர்த்திடுங்கள், குடும்ப வழக்கங்கள், நடைமுறைகள், பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்து வரும் விஷயங்கள் என்றால் முன்னரே மருமகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், கேட்கட்டும் என்று காத்திருந்து தவறிய பின்னர் கடிந்து கொள்ள வேண்டாம். எதிர்காலம் குறித்தும், வருமானம் குறித்தும் சதா சர்வ காலமும் பயந்து கொண்டே இல்லாமல் மகனுடன் இயைந்து வாழுங்கள். முயற்சித்துப் பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.
உங்களின் கணவர் வீட்டினர் யாரும் எதிரிகள் கிடையாது. உங்களுக்கு கணவர் மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ அதேயளவு அவரை இப்போதைய நிலைக்கு உயர்த்திய அவரது குடும்பத்தினர் மீதும் இருக்கட்டும். ஒரே நாளில் கணவர் வளர்ந்துவிடவில்லை என்பதையும் உணருங்கள். திருமணம் ஆகிவிட்டால் கணவர் முழுவதும் தனக்கே சொந்தம் என்று குழந்தைகள் பொம்மைக்கு சண்டையிடுவது போல சிறுபிள்ளைத்தனமாக யோசிக்காதீர்கள். கணவரின் எண்ணங்களுக்கு, விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும். தனக்கு பிடித்தமான அம்மாவிடம் காபி வாங்கி குடிப்பதாலோ அம்மாவுக்கு பிடித்த சேலை வாங்கிக் கொடுப்பதாலோ ஒன்றும் உங்களுக்கான அன்பு குறைந்திடாது.
வெவ்வேறு எல்லைகளில் நின்று கொண்டிருக்கும் பெண்களுக்கு நடுவே சிக்கியிருக்கும் ஆண், இச்சூழலை சமாளிப்பது ஒன்றும் பெரிய வித்தையல்ல. மாறி மாறி புகார்கள் வந்தால் உடனடியாக உணர்ச்சி வசத்தில் முடிவெடுக்காதீர்கள். உங்களுக்கான முன்னுரிமைகள் எது என்று தீர்க்கமாக முடிவெடுங்கள். முடிந்தவரையில் ஒளிவுமறைவுகளைத் தவிர்த்திடுங்கள். பொய்களை சொல்லி சிக்குவதை விட உண்மையைச் சொல்லி வரும் விவாதங்களை சந்தியுங்கள். மனைவி வந்துவிட்டால் அம்மாவின் இடம் குறைந்திடாது என்பதை புரிய வையுங்கள். நீங்கள் சமநிலையாக இருப்பது அவசியம். வாழ்க்கை வசப்படட்டும்! அன்பு வாழ்த்துக்கள்…. மாமியார் மருமகள் தீர்க்க முடியாத பிரச்சனையல்ல தீர்க்க மறுக்கிற பிரச்சனை தான்.