‘ஈகோ’ வைத் தூக்கி எறியுங்கள்
ஈகோ தான் பெரும்பாலும் கணவன் மனைவி சண்டைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திருமணம் பண்ணும்போதே முக்கியமான மனப்பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து கல்யாணம் பண்ணுங்கள். கணவனையோ அல்லது மனைவியையோ எந்தவித நிபந்தனையுமின்றி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். எந்த அளவுக்கு உங்கள் எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உங்கள் இல்வாழ்க்கை சிறக்கும் என்பது உறுதி.
திருமணமான புதிதில் காமம் பூரணமாக ஆட்சி புரியும் போது கணவனது குறைகள் மனைவிக்கும், மனைவியின் குறைகள் கணவனுக்கும் தெரிவதேயில்லை. ஆனால் மோகம் தெளிந்த பின்? கணவனும் மனைவியும் அதிக நேரம் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கும் பொழுது கணவனுக்குப் பிடிக்காத விஷயங்கள் மனைவி பண்ணுவதற்கும், மனைவிக்குப் பிடிக்காத விஷயங்கள் கணவன் பண்ணுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஈகோ தான் பெரும்பாலும் கணவன் மனைவி சண்டைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
‘ஈகோ’ வைத் தூக்கி எறியுங்கள். குறைகள் இல்லாத மனிதன் உலகின் எந்த மூலையிலும் இல்லை என்பதை உணருங்கள். உங்கள் துணையின் குறைகளை பொறுத்துக் கொள்ள பழகுங்கள். நீங்கள் உண்மையில் உங்கள் கணவனை அல்லது மனைவியை நேசித்தால் அவர்கள் குறைகள் கூட அழகாகத் தெரியும் என்பது நிஜம். உங்கள் துணைவரை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அது தற்கொலைக்கு சமம். எவ்வளவு சண்டைகள் இருந்தாலும் இல்லற இன்பத்திற்கு மட்டும் 144 போட்டு விடாதீர்கள்.
திருமணம் செய்யும்போதே அவர்களால் என்னென்ன நன்மைகள், சந்தோஷங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து திருமணம் செய்யாதீர்கள். காலம் முழுவதும் நம்முடன் இருப்பவருக்கு என்னென்ன கொடுக்கலாம் என்று நினைத்து திருமணம் செய்யுங்கள். திருமணம் என்பது இரு உடல்கள் மற்றும் இரு மனங்கள் ஒன்றாக இணைவதற்குச் செய்யும் புனித ஒப்பந்தம். இதில் எந்த நிர்பந்தத்திற்கும் இடமிருக்கக் கூடாது. எதைப் பெறலாம் என்று எதிர்பார்த்து திருமணம் செய்யாதீர்கள். என்ன கொடுக்கலாம் என்று நினைத்து திருமணம் செய்யுங்கள்.