உலக மக்களுக்கு இந்தியாவின் சீதனம் யோகா…
யோகா என்பது பண்டைய இந்தியாவின் பொக்கிஷம் என்பதையும், உலக அரங்கில் உள்ள புலப்படாத பாரம்பரியங்களில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதையும் பிரதிபலிக்கும் சிறந்த நாள் இதுவாகும்
.இன்று (ஜூன் 21-ந் தேதி) சர்வதேச யோகா தினம்.
கி.பி. 5-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உடல், மனது மற்றும் ஆன்மிக பயிற்சிக்கான நிலைதான் யோகா. உலக அளவில் தற்போது பல்வேறு நிலைகளில் யோகா பயிற்சி பின்பற்றப்படுகிறது. எனவே அதன் பெயரும், புகழும் மென்மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. மிகுந்த பயனளிக்கக் கூடிய பயிற்சி இது.
ஒருங்கிணைந்த உடல் நலம் பெறுவதற்கு அணுகக்கூடியதோடு, உடலுக்கும் மனதுக்கும் இடையிலான முக்கிய தொடர்பை அறிந்துகொள்ளச் செய்வதாகவும் யோகா அமைந்துள்ளது. சமநிலை, சாந்தம், அமைதி, கருணை போன்றவற்றை யோகா பயிற்சி அளிக்கிறது.
யோகா என்ற வார்த்தை, சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொல்லாகும். இணை அல்லது ஒன்று சேர் என்பது யோகாவின் அர்த்தமாகும். ஒருவன் தனது முன்னேற்றப் பாதையையும் உயர்ந்த நிலையையும் அடைவதற்கு உடல் தகுதிதான் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது என்பதை நமது பண்டிதர்கள் வலியுறுத்தி உள்ளனர். யோகா தரும் தூய்மையான பலன்கள், உடல் நலனை அடையக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றை உணர்ந்தே ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினம் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அறிவித்தன.
தற்போதைய சூழ்நிலைகளில், எதிர்பாராத கோணங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவதெல்லாம் நமக்கு பெருத்த சவால்களை உருவாக்கிவிடுகின்றன. அப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாழும் முறை, கல்வி, வேலை, மகிழ்ச்சி போன்றவையெல்லாம் துரிதமாக மாறிக்கொண்டிருக்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாழ்க்கை முறை மாறுகிறது. பொருளாதார முன்னேற்றம், திறன் மேம்பாடு, கல்வி அறிவு ஆகியவற்றில் மிகச் சிறந்த நிலையை அடைந்தாலும் மிக அவசியமான ஒன்றை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அது தேசத்தின் சமநிலையாகும்.
ஏழைகள் கவனிக்கப்பட வேண்டும். இயற்கை, தேசத்தின் ஒட்டுமொத்த அமைதி நிலைவரப்பட வேண்டும். உலகத்தைப் பற்றிய சிந்தனைக்காக நமது தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கு ஊக்கம் தேவைப்படுகிறது. சமநிலைப்பாடு என்பதுதான் அதற்கான மந்திரமாகும். அது யோகாவில்தான் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள், சீதோஷ்ண செயல்பாடுகள் என்பதாகும். நமது உடல் நிலையை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல, நமது பூமிக்கோளின் நலனையும் பேணுவதற்கான நமது தொடர்பையும் இந்த யோகா கொண்டுள்ளது.
யோகாவின் பயன்பாடுகள் பற்றி உலகம் மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. யோகா பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர்கள், உடல், மூச்சு, ஆழ்ந்த ஓய்வு, தியானம் ஆகிய 4 அம்சங்களையும் ஒருங்கே கொண்ட நேர்மறையான விளைவுகளை அளிக்கும் பயிற்சி என்று அங்கீகரித்துள்ளனர்.
எலும்பு தொடர்பான பிரச்சினைகள், இருதய நோய், ஒற்றைத் தலைவலி, திசுக்கள் இறுகிவிடுதல் போன்ற நோய்களுக்கு யோகா ஒரு அருமையான நிவாரணி. ரத்த நாளங்களின் நெகிள் தன்மையை 69 சதவீதம் அதிகரிப்பதோடு, ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் மருந்துகளின் உதவியில்லாமல் நீக்குவதற்கு யோகா உதவுகிறது என்று அதைப்பற்றிய ஆய்வு தெரிவிக்கிறது.
உடலின் பல்வேறு பாகங்களில் சென்று யோகா பயிற்சி செயல்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை உடல் பெறுவதோடு, சர்க்கரை நோய்க்கு தேவைப்படும் மருந்துகளில் 40 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிக்கை தயாரித்துள்ளது. யோகா பயிற்சி மேற்கொள்வோர் 43 சதவீத அளவுதான் மருத்துவ சேவையை பெறுகின்றனர் என்றும், 640 அமெரிக்க டாலர் முதல் 25 ஆயிரம் டாலர் வரை ஆண்டுக்கு பணம் சேமிக்கின்றனர் என்றும் அந்த பல்கலைக்கழகம் கருத்து பகிர்ந்துள்ளது.
இதில் நமக்கு என்ன பெருமை என்றால், கோடிக்கணக்கான உலக மக்களின் நலனை பாதுகாப்பதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதுதான். இதை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். யோகா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வைத்த தீர்மானத்தை உலகின் 177 நாடுகள் ஆமோதித்தன என்பதே அதற்கு நற்சாட்சி. இதன் மூலம் உலக மக்களின் உடல்நல மேம்பாட்டுக்கான இந்தியாவின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தேசங்களின் உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் துணை ஜனாதிபதியாக மற்ற நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்ட போதெல்லாம், அங்கு நடக்கும் யோகா பயிற்சிகளைக் கண்டும், அதன் புகழ் மென்மேலும் பெருகி வருவதை பார்த்தும் நான் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள பள்ளிக்கூட பாடத் திட்டத்தில் யோகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெரு உள்ளிட்ட சில நாடுகளில் யோகா மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோஸ்டா ரிக்காவில் யோகா மற்றும் தியானம் ஆகியவை பொதுமக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
யோகா என்பது உடல் நலனுக்கான பயிற்சியோடு நின்றுவிடாமல், சிறந்த சிந்தனை, நற்குண செயல்பாடுகள், கற்பதற்கான ஆற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகியவற்றையும் ஒருங்கிணைத்ததாக உள்ளது. மேம்பட்ட திறனோடு வெளிச் சூழ்நிலைகளில் நம்மை இணைத்துக்கொள்வதற்கு யோகா உதவுகிறது.
யோகாவை இசை என்று நிபுணர் ஒருவர் வர்ணிக்கிறார். மத எல்லைகளைத் தாண்டி உலக அளவில் இந்த இசை சென்றடைந்துள்ளது. இதன் மூலம் உலக மக்கள் அனைவரும் நோய்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
வெங்கையா நாயுடு, இந்திய துணை ஜனாதிபதி