உறவுகள்

குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரி செய்வது எப்படி?

குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.

குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்.

பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.

குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான் மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தை களின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.

குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.

எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker