ஆரோக்கியம்

மதிய உணவு சாப்பிட்ட பின் தூக்கம் வருவது ஏன்?

மதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன? தீர்வுகள் என்ன? என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

‘‘அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian rhythm-களில் ஏற்படும் மாறுதல்கள் இதற்கு காரணமாகிறது.

மேலும் உணவு உண்ட பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒருவித மயக்க நிலை ஏற்படும். மேலும் இதன் விளைவாக வேலையில் கவனமின்மை ஏற்பட்டு, பணியை சரி வர செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. மதிய நேர உறக்கத்தை ஏற்படுத்துவதற்கு மருத்துவரீதியான காரணிகளும், அதை தவிர்ப்பதற்கான வழி முறைகளும் உள்ளன.

நம் மதிய உணவுக்குப்பின் உடலின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் தடாலென்று குறைகிறது. இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்கள் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்க்க முழு தானிய வகைகளை சாப்பிடலாம். காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தலாம்.

ஹார்மோன் அளவு குறைதல் மகிழ்ச்சியின் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிற இந்த எண்டார்ஃபின் அளவு குறைந்தால் இயற்கையாகவே உடலில் சோர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளைகளில் சோர்வு நீங்க நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்ளலாம்.

தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் அளவு உயர்வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக்கத்திற்கு காரணமாகிறது. இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில் படும்படி நடப்பதால் வைட்டமின் டி-யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.

குளிர்சாதன வசதியுடைய அலுவலக வேலையானது தண்ணீர் தாகத்தைக் குறைத்துவிட்டது. இதனால் உடல் வறட்சியாகி சோர்வு உண்டாகும். இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.

உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற Diabetes, BP, Obesity போன்ற நிலைகளை மேலும் பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழவகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம். உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் கால் பகுதி முழு தானியமாக எடுத்துக் கொள்வதை பழக்கமாக்க வேண்டும். தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப்பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker