பிள்ளைகள் அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை படிக்க வேண்டும்
பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
பாடப்புத்தகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மறந்து மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ – மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ – மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ – மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறுகளில் ஈடுபடாமலும், நல் வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும். செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டால் எந்த வேலையையும் எளிதாக செய்துவிட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.