ஆரோக்கியம்

உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வாகிறது கயிறு தாண்டும் பயிற்சி

உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது ‘ஸ்கிப்பிங்’ (கயிறு தாண்டும்) பயிற்சி.

உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது ‘ஸ்கிப்பிங்’ (கயிறு தாண்டும்) பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகை உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ‘ஸ்கிப்பிங்’ செய்வதால் கிடைக்கும் நன்மைகளாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். உடலின் உள் உறுப்புகளுக்கும் நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும்.

இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும். தினமும் ‘ஸ்கிப்பிங்’ செய்வதால், உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி.

பெண்களை அதிகமாகத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்புகள் மென்மையாகிற நோய்த் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவடையும். ஸ்கிப்பிங் பயிற்சி செலவில்லாதது. எங்கும் எப்போதும் செய்யலாம். ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். உடலின் சமநிலைத் தன்மை மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

ஸ்கிப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை:-

ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ, அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை உங்களின் உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கயிற்றில் சரியான நீளத்தை தேர்வுசெய்ய, நீங்கள் கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு. ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிக கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும். ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோன்று அதிக கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது. தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியை கடினமானதாக மாற்றும். நல்ல தரமான கயிற்றை பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்.

ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது என்றால் அதிக உயரம் கொண்டவர்கள் கயிறு தாண்டும் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கவும். கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கலாம். பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுச் செய்வது நல்லது. எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker