ஆரோக்கியம்

நவீன டாட்டூக்களும் – ஏற்படும் விளைவுகளும்

டாட்டூவில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நிரந்தரமானது. இன்னொன்று தற்காலிகமானது. டெம்ரவரி டாட்டூஸ் ஒரு வாரத்தில் அழிந்துவிடும். பெர்மனென்ட் டாட்டூஸ் என்பது நம் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். உடல் புதைக்கப்பட்டு மக்கினாலும் நம் எலும்பில் டாட்டூவின் பதிவு இருப்பதற்கான ஆதாரங்களும் உண்டு.

‘முன்பு பச்சை குத்துவதுபோல ஒரே நிறம் இப்போது இல்லை. டெக்னாலஜி ரொம்பவே இப்போது வளர்ந்துவிட்டது. எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் மை டெக்னாலஜி தொழில்நுட்ப உதவியோடு காட்ரிஜ் ஊசி போன்ற கருவியில் ரசாயன மை நிரப்பி, மின்சாரம் மூலம் சூடேற்றி அப்படியே உடலில் விரும்பிய இடத்தில் வரைவதே டாட்டூஸ். இதைப் பல வடிவங்களில் பல வண்ணங்களில் மனதிற்கு பிடித்த மாதிரி போட்டுக்கொள்ளலாம். ஆனால் என்ன, நாம் போட்டுக்கொள்வது பெர்மனென்ட் டாட்டூ என முடிவானால், நிறைய யோசித்து முடிவு செய்துவிட்டு வாருங்கள். ஏனெனில் நிரந்தர டாட்டூவை அழிக்க வழியே இல்லை. அது வாழ்நாள் அடையாளம். நிழலாய்த் தொடரும்.தற்காலிக டாட்டூஸால் வலிகள் ஏற்படுவதில்லை.

தற்காலிக டாட்டூஸ்கள் அழகுக்காக வண்ணக் கலவைகளால் வரையப்படுபவை. அல்லது ஸ்டிக்கர் வடிவில் நமது சருமத்தின் மேலே ஒட்டிக்கொள்பவை. இவை நிரந்தரமற்றது. தானாய் அழியத் தொடங்கிவிடும். சிலர் காதலில் இருக்கும்போது அந்தக் காதல் நிலைக்குமோ நிலைக்காதோ, அவசரப்பட்டு, அன்பின் வெளிப்பாடாய் தங்கள் இதயத்திலும், மறைவான இடங்களிலும், சிலர் வெளியில் தெரிய கைகளிலும் பிடித்தமானவர்களின் பெயரை டாட்டூவாகக் குத்திக்கொள்வார்கள். காதல் கைகூடாத நிலையில், வேறொருவருடன் திருமணம் முடிவான நிலையில், போட்டுக்கொண்ட நிரந்தர டாட்டூவை அழிக்கச்சொல்லி வருவார்கள்.

அப்போது லேசர் சிகிச்சை மூலம் டாட்டூவை அகற்ற முடியும். அதுவும் முழுமையாக அகற்ற முடியும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. சில அடர் வண்ண நிற டாட்டூவை நீக்க பல முறை லேசர் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும். ஏனெனில் வண்ணங்களில் நிறைய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், அழிப்பது கடினமாக இருக்கும். டாட்டூவை நீக்கும்போது உண்டாகும் வலி போடும்போது இருக்கும் வலியைவிட பன்மடங்காக இருக்கும். தொழில் முறையில் இதற்கு ஒரு வழிதான் உண்டு. அதாவது ஏற்கனவே போடப்பட்ட டாட்டூவை மறைத்து அதன் மேல் வேறொரு வடிவத்தைக் கொண்டு வருவது. ஆனால் அது இன்னும் கூடுதலான வலியையும், செலவையும், நேர விரயத்தையும் ஏற்படுத்தும்.

விலை மலிவான தரமற்ற வண்ணங்கள், காயில்கள், ஊசிகளைப் பயன்படுத்துவது, ஒருவருக்குப் பயன்படுத்திய அசுத்தமான ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்துவது போன்ற செயல்களால் நோய் தொற்று ஏற்படலாம். சரியான பயிற்சி இன்றி டாட்டூஸ் போடும்போது டாட்டூஸ் சருமத்தோடு ஒட்டிய தோற்றத்தை தராமல், தோலின்மேல் துருத்திக்கொண்டு நிற்கும்.

டாட்டூஸின் விளைவுகள்

* டாட்டூஸ் நிரந்தரமாகப் போடும்போது கட்டாயம் வலியும், போட்ட இடத்தில் அரிப்பும் இருக்கும். வலி நீங்க சிலருக்கு பத்து நாட்களும் சிலருக்கு அதற்கு மேலும் ஆகலாம்.

* சிலருக்கு வண்ணங்களில் உள்ள ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படும். விளைவு சருமப் பாதிப்பு உண்டாகலாம்.

* உடல்நலம் பாதிக்கவும் வாய்ப்புண்டு.

* டாட்டூ ஸ்டிக்கரில் உள்ள பசையும் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும்.

* மருதாணி இடுவதுகூட தற்காலிக டாட்டூஸ்தான். வண்ணம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் மருதாணியில் பி.பி.டி. என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker