வலிகள் நீங்க சில வழிகள்…
மூட்டுகளில் கால்மூட்டு, கணுக்கால் மூட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை மூட்டுகளையே அதிகமாக பயன்படுத்துகிறோம். மூட்டுகளில் வலி ஏற்பட்டால் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
மூட்டுபிடிப்புகளும் தசை பலகீனமும் ஏற்பட்டு வலிகள் உண்டாகிறது. நமது உடம்பில் 360 எலும்பு இணைப்புகளும் 639 தசைகளும் 206 எலும்புகளும் உள்ளன. மனிதன் ஒரு அடி எடுத்துவைக்கும் போது 140 தசைகள் இயங்குகிறது.
மூட்டுகளில் கால்மூட்டு, கணுக்கால் மூட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை மூட்டுகளையே அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த மூட்டுகளை முறையாக அசைத்து பயிற்சி செய்ய எளிய வழிகள் உள்ளன. படுக்கை பயிற்சியாக இரவில் படுக்கும்போது உணவுக்கு பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு படுக்கையில் மல்லாந்து படுத்த நிலையில் கால் விரல்களில் தொடங்கி கணுக்கால், முழங்கால், இடுப்பு, கழுத்து, கைகளை ஒரு மூட்டுக்கு 10 என்ற எண்ணிக்கையில் முழு அளவும் அசைத்துவிட்டு உறங்கலாம்.
அப்படியே எழும்போது அசைத்துவிட்டு எழும்புவது நல்லது. மூட்டுகளை தொடர்ந்து அசைப்பதனால் தசைகள் வலுப்பெறும் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். மூட்டுகளில் பசைத்தன்மை குறையாமல் மூட்டுத்தேய்மானம் தடுக்கப்படும். வாரத்திற்கு இரு முறையேனும் மிதமான நடைபயிற்சி செய்வதும் மோட்டார் சைக்கிளில் செல்வதை நிறுத்திவிட்டு சைக்கிள் ஓட்டுவதும் சிறந்த பயிற்சியாகும்.
இன்றைய சூழலில் அனேக மக்கள் குதிகால் வலியினால் அவதிப்படுகிறார்கள். கெண்டைக்கால் தசைகள் தொகுப்பாக மாறி குதிகால் எலும்பில் போய் முடிவடைகிற இடத்தில் ஒருசிறு எலும்பு வளாச்சி உண்டாகி தசைகளை அழுத்தும்போது குதிகால்வலி ஏற்படுகிறது. இதற்கு ‘கல்கேனியல் ஸ்பர்‘ என்று சொல்லப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் ஒரு அடிகூட தரையில் கால் வைக்கமுடியாத அளவிற்கு வலி ஏற்படும். வலியை பொறுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தவுடன் வலியின் தன்மை குறைந்துவிடும். இதற்கு காலையில் எழுந்தவுடன் நடப்பதற்கு முன்பாக ஒரு மசாஜ் செய்து பிடித்து விட்டு கொண்டு கால்விரல்கள் மற்றும் கணுக்கால்களை முன்னும் பின்னும் அசைத்து நன்கு பயிற்சி செய்தபிறகு சிறிதளவு மிதவெப்பமான வென்னீரில் ஒரு 10 நிமிடம் காலை வைத்திருந்தால் காலில் ரத்த ஓட்டம் அதிகமாகி வலி குறைந்துவிடும்.
பிறகு நடக்க ஆரம்பிக்கலாம். மிருதுவான ரப்பர் செருப்புகள் எம்.சி.ஆர் செருப்புகளை அணிந்து நடந்தால் நாளடைவில் வலி குறைந்துவிடும். மணற்பகுதிகளில் வெறும்காலில் நடப்பதும் சைக்கிள் ஓட்டுவதும் நல்ல பயிற்சியாகும். பெண்கள் ஹைகீல்ஸ் செருப்புகளை தவிர்ப்பது நல்லது. இது மூட்டுகளில் தேவையற்ற அழுத்தத்தை உண்டு பண்ணி உங்களுக்கு தெரியாமல் உடம்பில் பல மூட்டுகளில் வலிகளை கொண்டுவந்துவிடும்.
அடுத்து முழங்கால் மிகவும் முக்கியமானது. உடம்பின் எடையை தாங்கவும் உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் அதிக நேரம் நின்று கொண்டு பணி செய்பவர்கள் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உடற்பயிற்சி செய்யாதோர்களுக்கெல்லாம் மூட்டு முழங்கால் வலி ஏற்படும். உடல்பருமன் குறைய உணவுக்கட்டுப்பாடும் கொழுப்புள்ள உணவினையும் தவிர்க்கவும். கால்சியம் சத்து நிறைந்த பால், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் துவையல், அத்திப்பழம், பாதாம் உணவில் சேர்த்துக்கொள்வதும் மாமிச உணவு, புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்ப்பதும் எலும்பின் நலனுக்கு இன்றியமையாதது.
எளிய பயிற்சிகளை அதாவது படுக்கையில் ஒருபுறம் சாய்ந்து படுத்துக்கொண்டு முழங்கால் மூட்டுகளை முன்னும் பின்னும் அசைப்பதும் குப்புற படுத்துக்கொண்டு முழங்கால் மடக்கி நீட்டுவதும் நல்ல பயிற்சியாகும். தற்போது 40 வயது வந்தவுடன் முழங்காலில் தேய்மானம் ஆரம்பித்து விடுகிறது. ஆஸ்ட்டியோ ஆர்த்ரைடிஸ் என்று அழைக்கப்படும் முழங்கால் மூட்டுத் தேய்மானத்தால் உலகெங்கும் 630 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் வருடந்தோறும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அடிப்பட்ட வீக்கத்திற்கு உடனே ஐஸ் ஓத்தடம் கொடுப்பது நல்லது. உடல்பருமனால் முழங்காலில் வலி உள்ளவர்கள் உடல்எடையை குறைப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.
முழங்கால் உறைகளை அணியவேண்டும். ஆரம்பநிலையில் முழங்கால் வலி உள்ளவர்கள் வீட்டிலேயே உள்ள அருமையான மருத்துவம் வென்னீர் ஒத்தடம் வென்னீரில் ஒரு கைபிடி அளவு கல்உப்பு போட்டு கதர் துணிக்கொண்டு ஒத்தடம் கொடுக்க எல்லா தசைகளிலும் வலி குறைந்துவிடும். தொடை தசைகள் பலவீனமானால் முழங்கால் வலி வந்துவிடும். தொடைதசை வலுப்படுத்த மல்லாந்து படுத்த நிலையில் முழங்காலில் பின்புறம் மெல்லிய தலையணையை வைத்து முழங்காலில் 50 முறை விட்டு விட்டு அழுத்தவேண்டும். மேலும் அதேநிலையில் காலை நீட்டியவாறே முழங்காலையும் தூக்கி பிறகு சமநிலைக்கு கொண்டுவரும் பயிற்சி ஒரு காலிற்கு 10 முறை என்ற அளவில் செய்வதும் சிறந்தது. உடம்பின் மொத்த எடையும் கூடும் இடம் இடுப்பு பகுதியாகும்.
முதுகெலும்பின் அடிபகுதியில் தான் தேய்மானம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. நீண்டதூர இருசக்கர வாகன பயணம் போன்றவை இடுப்பு வலிக்கு காரணம். குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் சிறிதளவு முட்டியை மடக்காமல் தூக்கி பிறகு தளர்த்தும்படி 10 முறை செய்வது இடுப்பு தசையை வலுப்பெறச் செய்யும். முதுகு வலி உள்ளவர் படுக்கையிலிருந்து எழும்பும்போது ஒரு பக்கமாக சாய்ந்து எழும்புவதும் முழங்கால்களை மடக்கிக்கொண்டு தரையில் உள்ள பொருட்களை எடுப்பதும் முதுகுவலியை குறைக்கும் வழியாகும்.
கழுத்துவலி நீங்க மருத்துவம் சொல்லும் தலையணை மந்திரம் என்னவென்றால் பெரிய உயரமான தலையணைகளை தவிர்க்கவேண்டும். டெயிலர் தொழில் செய்பவர் எழுத்து பணியாளர்கள் ஓட்டுனர்களுக்கு அதிகமாக கழுத்து வலி ஏற்படுவதுண்டு. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கழுத்தினை 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பக்கவாட்டிலும் முன்னும் பின்னும் அசைத்து பயிற்சி செய்வதன் மூலம் கழுத்து வலியை குறைக்கலாம். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கீழே பக்கவாட்டில் என வட்டம் போடுவதால் 5 லிருந்து 10 முறை செய்வதும் நல்ல பயிற்சியாகும்.
தாய்மார்கள் ஆட்டுக்கல்லையும் அம்மிக்கல்லையும் வாரம் ஒரு முறையேனும் பயன்படுத்துவதும் குனிந்து நிமிர்ந்து கோலம்போடுவதும் குடும்பத்தலைவர்கள் கார்களை பயன்படுத்துவதை தவிர்த்து கால்களை பயன்படுத்தி நடைபயிற்சி சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல் போன்றவை செய்வதும் வலிகளை நீக்க சிறந்த பயிற்சிகளாகும். எனவே உடம்பிற்கு பயிற்சிசெய்து வலிகளை நீக்கி ஆரோக்கியமாக வாழ்வோம்.