வாழ்க்கை என்பது வாகனம் போன்றது.. அவ்வப்போது அதை பழுதுபார்க்கவேண்டும்..
ஆண்களை திருத்தவோ, அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கவோ முன்வராதவர்கள், அதுபோன்ற தவறை பெண் செய்துவிட்டால் அவள் திருமண வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள்.
திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். அந்த பிரச்சினைகளையோ, அதனால் ஏற்படும் மனக்காயங்களையோ, திருப்தியின்மையையோ பெண்கள் வெளியே சொன்னால் அது ஒழுங்கீனம் என்று கருதப்படுகிறது. தனது மனக்காயங்களுக்கு மருந்து தேடும் விதத்தில் அதை பற்றி அடுத்தவர்களிடம் சொல்லிவிட்டால், ‘தன் மனைவியின் நடவடிக்கை சரியில்லை’ என்ற முடிவுக்கு கணவர் வந்துவிடுகிறார்.
திருமணம் என்ற ஒப்பந்தம் இருவருக்கும் பொதுவானது. அந்த ஒப்பந்தத்தில் நிறைய கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அந்த கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் ஆண்களை பெரும்பாலும் சமூகம் கண்டு கொள்வதில்லை. இதிகாச காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வரும் அவலம் இது. ஆண்களின் குணமே அப்படித்தான் என்று அவர்களுக்கு ஆதரவாகவே பேசுவார்கள். அதற்கும் ஒருபடி மேலே சென்று, ‘அவன் அவ்வாறு நடந்துகொள்வதற்கு அவனது மனைவிதான் காரணம்’ என்று தேவையில்லாமல் மனைவி மீது வீண்பழியும் சுமத்துவார்கள்.
ஆண்களை திருத்தவோ, அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கவோ முன்வராதவர்கள், அதுபோன்ற தவறை பெண் செய்துவிட்டால் அவள் திருமண வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவருடன் பேசினால், பழகினால் அது தவறாக பார்க்கப்படுகிறது. இதற்கு மனோரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதுபற்றி பிரபலமான மனநல நிபுணர் டாக்டர் ராமவுன் லாம்பா ஆராய்ச்சி செய்து சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
“திருமணத்திற்கு பின்பு ஒரு பெண், இன்னொரு ஆணுடன் பேசுவதும்- ஒரு ஆண், இன்னொரு பெண்ணிடம் பேசுவதும் இருவேறு கோணங்களில் அலசி ஆராயப்படுகிறது. ஆண்களை பொறுத்தவரை காதல் வேறு, பாலியல் உறவு வேறாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெண்களின் மனநிலை அப்படியில்லை. காதலின் ஆழத்தை பொறுத்துதான், பெண்களின் பாலியல் உறவு நிலை வலுப்படுகிறது. ஒரு பெண் மனதளவில் கணவனை விட்டுப் பிரிந்து வேறுஒருவருடன் சென்றுவிட்டால் அதோடு அவளது மணவாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது.
கற்புக்கு பலவித அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், மனம் என்பது மட்டுமே அதற்கு சரியான பொருள். பெண்ணின் மனம், கணவருடனான திருமண வாழ்க்கையை விட்டு விலகிப்போகும்போது அவளது எதிர்காலம் தடுமாற்றத்திற்குள்ளாகிறது. அப்போது கூட சமூகத்தில் தனக்கு இருக்கும் மரியாதைக்கு பங்கம் நேர்ந்துவிடுமோ என்றுதான் பயப்படுவாள். மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வேதனைப்படுவாள்.
தனக்கும்- தன் மனைவிக்கும் இடையே மூன்றாம் நபர் ஒருவர் வந்துவிட்டார் என்று கணவர் கருதும்போது, அவரும் மிகுந்த மனக்குழப்பத்திற்கு உள்ளாகிவிடுவார். மனைவி தன்னைவிட்டு விலகிவிட்டால், தனது எதிர்காலம் என்னவாகும்? எப்படி புரியவைத்து தடுப்பது? குடும்ப கவுரவத்தை எப்படி காப்பாற்றுவது? குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்? தன்னிடம் ஏதேனும் குறை உள்ளதா? இதுநாள் வரை வாழ்ந்தது போலியான வாழ்க்கையா? யாரிடம் சொல்லி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது? இப்போது என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்பன போன்ற பல கேள்விகள் கணவனை பாடாய்ப்படுத்தும். தம்மை பார்த்து இந்த சமூகம் கேலியாக சிரிக்கும் நிலைமை வந்து விடுமோ? என்ற கலக்கமும் தோன்றும்..” என்று ஆண், பெண் இருவருக்குமே தெளிவுபடுத்து கிறார், டாக்டர் லாம்பா.
இ்ந்த மாதிரியான நெருக்கடிக்குள் வாழ்க்கை சிக்கும்போது என்ன செய்யலாம்?
‘மேரேஜ் பிட்னெஸ்’ என்ற புத்தகத்தை எழுதி யிருக்கும் பட்டேல் இதற்கு தீர்வு தருகிறார்!
“வாழ்க்கை என்பது வாகனம் போன்றது. அவ்வப்போது அதை பழுதுபார்க்க வேண்டும். அப் போதுதான் எங்கே குறை இருக்கிறது என்பதை கண்டறிந்து சரி செய்ய முடியும். எந்த பெண்ணுக்கும் தன் கணவனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கப் போவதில்லை. திருமண வாழ்க்கையின் அஸ்திவாரமான நம்பிக்கையை அசைத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படாது. ஏதோ ஒரு வகையில் செய்த தவறு வாழ்க்கையை திசை மாற்றிவிடும். அந்த சமயத்தில் நிலைமையை பக்குவமாக கையாள வேண்டும். அப்போது ஆவேசம் வரும். மனைவியை தண்டிக்கத் தோன்றும். நான்கு பேரிடம் சொல்லி நியாயம் கேட்க தூண்டும். அப்படி செய்வதுதான் சரியென்று மனம் சொல்லும். ஆனால் அதெல்லாம் குடும்ப வாழ்க்கையை சிதைக்கத்தான் வழிவகை செய்யும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆத்திரப்பட்டு தவறான முடிவு எடுத்துவிடக்கூடாது. நிலைமையை சுமுகமாக கையாள வேண்டும். கையைவிட்டு நழுவும் பொருள் நமக்கு சொந்தமானது. அதை பத்திரப்படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. அந்த சமயத்தில் பேசிப் பேசி பிரச்சினையை அதிகப் படுத்தி வாழ்க்கையை சிக்கலாக்கி விடக்கூடாது. சொந்தம், பந்தம், உறவுகள், நட்பு என எல்லோரிடமும் நடந்த சம்பவங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை. சிலர் ஆறுதல் கூறுவதுபோல் பேசி எல்லா தகவல்களையும் கறந்துவிடுவார்கள். பின்னர் மற்றவர்களிடம் கூறி சிரித்து மகிழ்வார்கள்.
அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால் மானம் போய்விடும், வாழ்க்கையே முடிந்துவிடும் என்றெல்லாம் கூறி தவறாக சித்தரித்துவைத்திருக்கிறார்கள். அதை நம்பி மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. தவறான முடிவும் எடுத்துவிடக்கூடாது. அவசரப்பட்டு பிரிவு முடிவை எடுத்துவிட்டால் அதன் பிறகு குழந்தைகளின் எதிர்காலம், வழக்கு, விவாகரத்து, ஜீவனாம்சம் என ஏராளமான சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். அதற்கு இடம் கொடுக்காமல் மன்னிப்பு மூலமே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் அல்லவா!
ஒருவேளை மன்னிக்கவேகூடாத குற்றம் என்று சிலர் சொல்லலாம். ஆனால், அதற்காக உங்கள் வாழ்க்கையையே நீங்கள் சிதைத்துவிட முடியாது அல்லவா! கேலி பேச நினைப்பவர்களுக்கு நீங்களே வலிய சென்று வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் தவறு செய்ய நினைத்தால் அதற்கு கணவரின் செயல்பாடும் நிச்சயம் ஒருவகையில் காரணமாக இருக்கும். அதனை சரி செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மனம் விட்டு பேசி துணையின் தவறை திருத்துவதற்கு முயல வேண்டும்.
அப்படியும் துணையின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றால், இதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி கூறவேண்டும். தனக்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளின் நலனுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க சொல்லுங்கள். நீங்கள் செய்த தவறு எதுவாக இருந்தாலும் அதற்காக மனம் விட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் இருவருக்குமிடையேயான பிரச்சினையை பற்றி நீங்கள் பேசாததையா மற்றவர்கள் பேசிவிடப்போகிறார்கள்? வாழ்க்கையில் செய்யும் தவறுகளை சரி செய்வதற்கு பொறுமை தேவை” என்கிறார், அவர்.
குடும்பநல ஆலோசகர் டாக்டர் ராஷி அகிஜா சொல்கிறார்:
‘‘பெரும்பாலான பெண்கள் உடல் ரீதியான தேடலுக்காக திருமண வாழ்க்கையை விட்டு வெளி யேறுவதில்லை. கணவனிடம் இருந்து அன்பும், அனுசரணையும் கிடைக்காதபட்சத்தில் அது கிடைக்கும் இடத்தை தேடிப் போவார்கள். அந்த சமயத்தில் பின்விளைவுகளை பற்றி யோசிக்க மாட்டார்கள். கணவன்தான் சுதாரித்துக்கொண்டு தவறை திருத்திக்கொள்ள முயல வேண்டும். மனைவி தவறே செய்திருந்தாலும் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். மன்னித்துவிட வேண்டும். மீண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் அதுபற்றி பேசவே கூடாது.
இந்த மாதிரியான நெருக்கடியில் கணவன்- மனைவி இருவருடைய மனதையும் சம நிலைக்கு கொண்டு வந்து பழைய வாழ்க்கையை நோக்கி பயணிக்க வைக்க ‘கப்பிள்ஸ் தெரபி’ உதவுகிறது. இந்த தெரபி இருவருக்கும் தேவை. அவர்கள், தடுமாறிய சம்பவத்தை ஒரு விபத்து என்று எண்ணி மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதற்கான தீர்வை வெளியே போய் தேடக்கூடாது. திருமண வாழ்க்கை மனைவியின் தவறால் மட்டுமே சிதைந்துவிடாது. அதன் பிறகு இருவரும் என்ன முடிவு எடுக்கிறார்கள். எப்படி பிரச்சினையை கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே மீதமுள்ள வாழ்க்கை அமையும்” என்கிறார்.